எலிசபெத் மாகாராணியின் இறுதிச் சடங்கிற்காக உலக தலைவர்கள் இலண்டன் வருகை – பல இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஒரே வாய்ப்பாக அமையும் என்றும் எதிர்பார்ப்பு!
Sunday, September 18th, 2022இரண்டாம் எலிசபெத் மாகாராணியின் இறுதி சடங்கு நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் லண்டன் வந்தடைந்தார்.
லண்டனுக்கு வரும் சுமார் 500 அரச தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஒருவராவார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவுஸ்ரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆகியோரும் லண்டன் வந்துள்ளனர்.
இதேவேளை பங்களாதேஷ் பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட கொமன்வெல்த் தலைவர்களும் இறுதி சடங்கிற்காக பிரித்தானியாவிற்கு வந்துள்ளனர்.
மேலும் பிரான்ஸ் ஜனாதிபதி, அயர்லாந்து பிரதமர், ஜேர்மன், இத்தாலி, இந்தியாவின் ஜனாதிபதிகள் மற்றும் ஐரோப்பாவில் உள்ள அரச குடும்ப உறுப்பினர்களும் இறுதி சடங்கில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பல தலைவர்களுக்கு, இந்த சந்திப்பு சில இராஜதந்திரங்களில் ஈடுபடுவதற்கான ஒரே வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் மத்தியில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணையவுள்ளார்.
இலங்கையின் அரச தலைவராக, எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் பங்குகொண்ட தம்பதியரின் மகனான ரணில் விக்ரமசிங்க, எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்பதன் மூலம் இவ்வாறு வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெற்றோர்களான எஸ்மன்ட் விக்ரமசிங்க மற்றும் நளினி விக்ரமசிங்க ஆகியோர் 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் பிரதமர் டட்லி சேனாநாயக்கவுடன் கலந்துகொண்டனர்.
உலக வரலாற்றில் அரச குடும்பத்திற்கு வெளியே இவ்வாறானதொரு வாய்ப்பைப் பெற்ற முதல் நபர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|