எமது மாவட்டத்தின் அரச தொழில்துறை வெற்றிடங்கள் எமது பிரதேச இளைஞர் யுவதிகளைக்கொண்டே நிரப்பப்பட வேண்டும் –  பிரதமரிடம் ஈ.பி.டி.பி கோரிக்கை!

Wednesday, May 30th, 2018

மத்திய அரசால் வழங்கப்படுகின்ற அரச தொழில் வெற்றிடங்களுக்கு ஆளணி நிரப்பப்படும்போது எமது மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளைக்கொண்டே அந்த தொழில் வாய்ப்புக்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த செவ்வாயன்று யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில்  கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் விசேட பிரதிநிதியாக கலந்துகொண்டு யாழ் மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருக்கு எடுத்துக்கூறும் போதே குறித்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது –

எமது மாவட்டத்தின் தொழில் துறை ஆளணி வெற்றிடங்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்படுகின்ற தொழில் துறைகளுக்கு வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் தத்தமது மாவட்டங்களின் இளைஞர் யுவதிகளை நியமித்துக்கொள்வதால் எமது மாவட்டத்தில் அந்த தொழில்துறைக்கான வெற்றிடம் தொடர்ந்தும் நிரப்பப்படாத ஒரு நிலையில் இருந்துவருகின்றது. அத்துடன் அரச தொழில் வாய்ப்புக்களுக்காக காத்திருக்கும் எமது இளைஞர் யுவதிகளும் தொழில்வாய்ப்பு கிடைக்காமையால் ஏமாற்றமடைந்து காணப்படும் நிலை உருவாகுகின்றது.

கடந்த காலங்களில் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தபோது இவ்வாறான சம்பவங்கள் எதுவும் எமது மாவட்டத்தில் நடைபெற இடமளிக்கப்படவில்லை என்பதுடன் எமது பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு சமத்துவமான முறையில் அவை பகிரப்பட்டும் வந்தன. ஆனால் இன்று அவ்வாறான ஒரு நிலைமை காணப்படவில்லை.

எமது பிரதேசத்தின் மத்திய அரசால் வழங்கப்படுகின்ற அரச ஆளணி வெற்றிடங்களுக்கு பிறமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதால் அவர்கள் ஆறு மாதம் அல்லது ஒருவருடத்தின் பின்னர் தமது பிரதேசங்களுக்கு இடம்மாற்றம் பெற்றுச் செல்கின்றனர். இதனால் எமது பிரதேசத்தினது தொழில் வாய்ப்புக்கள் பறிக்கப்படுகின்றதுடன் எமது இளைஞர் யுவதிகளினது எதிர்பார்ப்புக்களும் சிதைக்கப்படுகின்றது.

இந்த நிலைமை இனிமேலும் தொடராதிருப்பதற்கு தாங்கள் கவனம் செலுத்தவேண்டும் என மேலும்  தெரிவித்திருந்தார்.

குறித்த கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்திய பிரதமர் அதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: