எதிர்கால பயணத்திற்கு உதவுமாறு வியத்மக அமைப்பிடம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வேண்டுகோள்!

Monday, September 14th, 2020

அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு உதவுமாறு ‘வியத்மக’ அமைப்பிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘வியத்மக’ பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கல்விமான்கள் புத்திஜீவிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களைக் கொண்ட அமைப்பாகும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ‘வியத்மக’ செயற்பாடுகள் மக்களின் அரசியல் சமூக சிந்தனையில் ஆழமானதொரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் அதிகாரம் தலையிட வேண்டிய இடங்களை இனங்கண்டு அதில் சம்பந்தப்படாது நாட்டின் எதிர்கால பயணத்திற்காக திட்டங்களையும் கொள்கைகளையும் தயாரிக்கும் பொறுப்பு வியத்மகவிற்கு முன்னால் உள்ளதென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்..

ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ‘வியத்மக’ அமைப்பின் தலைவராக நேற்று எத்துல் கோட்டையில் உள்ள ‘வியத்மக’ அலுவலகத்தில் முதன்முறையாக அதன் உறுப்பினர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கிராமங்கள் மற்றும் நகரங்கள் உள்ளடங்களாக அனைத்து மக்களையும் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமையை வழங்கி இராஜாங்க அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் நோக்கங்களை வெற்றிகொள்வதற்கு பங்களிக்கக்கூடிய வழிவகைகள் குறித்தும் ஜனாதிபதி ‘வியத்மக’ நிறைவேற்றுச் சபைக்கு தெளிவுபடுத்தினார்.

உப குழுக்களை அமைத்து முன்மொழிவுகள் மற்றும் திட்டங்களை முன்வைத்து இராஜாங்க அமைச்சுக்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வழி காட்டவும் அமைச்சரின் முன்னுள்ள சவாலான சந்தர்ப்பங்களின் போது ஆலோசனைகளை வழங்கி உதவுவதற்கும் முடியுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: