எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் இந்திய – இலங்கை கடற்படை தளபதிகளுக்கு இடையில் விசேட பேச்சு!

Thursday, June 3rd, 2021

மூழ்கி கொண்டிருக்கும் எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் இந்திய கடற்படை தளபதி மற்றும் நாட்டின் கடற்படை தளபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கம்பீர் சிங் தொலைபேசி ஊடாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்னவுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

தற்போதைய நிலையில் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குவது தொடர்பில் இரு நாடுகளின் கடற்படை தளபதிகளும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை கப்பலை தற்போதுள்ள இடத்தில் இருந்து அகற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வணிக கப்பல் செயலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் கிடைக்கவில்லை என அந்த காரியாலயத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் கப்பலில் இருந்த எரிபொருள் தீ பரவலுடன் எரிந்திருக்கலாம் என நம்பப்படுவதாக கப்பலை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் அதனை உறுதி செய்வதற்காக கப்பலை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் சூழியோடும் குழுவினர் குறித்த கப்பலின் கீழ் பகுதியை ஆராயவுள்ளதாக வணிக கப்பல் செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

எவ்வாறாவது எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அந்த எண்ணெய் படலம் பரவுக்கூடிய பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதன்படி எண்ணெய் படலம் பரவுவதை தடுப்பதற்கு தேவையான மிதவைகள் போதுமான அளவு தயார் நிலையில் உள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போதைய நிலை தொடர்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் துறைமுக அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

முற்பகல் 10 மணிக்கு துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலுக்கு கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், இலங்கை கடற்படை, கடற்றொழில் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி பணிமனை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: