எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம் – மீன்பிடி தடையும் விரைவில் நீக்கம்!

கடலில் தீக்கிரையாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகள் மற்றும் அழிவடைந்த பகுதிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 120 நாட்களில் குறித்த பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கழிவுகளை அகற்றும் செயன்முறையால் தொடர்ந்தும் கடல் மாசடையாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக குறித்த செயன்முறையை கண்காணிப்பதற்காக வர்த்தகக் கப்பல்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதுவரை பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களுக்கும் முதற்கட்ட இழப்பீட்டுத் தவணைக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்திற்கான மீன்பிடித் தடையை முற்றாக நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கழிவுகளை அகற்றும் செயன்முறை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் இரண்டிலும் குறித்த தடை நீக்கப்படும் எனவும் நிதியமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, மீன்பிடி மற்றும் கடல்சார் சூழல் கண்காணிப்பு அதிகாரசபையின் உரித்தின் ஒருபகுதியான 3.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு வைப்பிலிடப்பட்டுள்ளது எனவும், எஞ்சிய உரித்தின் பங்கைப் பெற்றுக் கொள்வதற்காக பீ அன்ட் ஐ கம்பனியுடன் கலந்துரையாடப்படுவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடல்வாழ் உயிரினங்களின் உடற்கூற்று மாதிரிகள் மற்றும் ஏனைய மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வதற்காக வெளிநாட்டு ஆய்வு கூடங்களுக்கு அனுப்பப்படும் எனவும் அவுஸ்திரேலியாவின் ஹெல்மோர் கம்பனியால் சுற்றாடல் பாதிப்பு தொடர்பாக சட்ட ஆலோசனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|