உலக கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா காலமானார் – உலகெங்கிலுமிருந்து மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பு!

Thursday, November 26th, 2020

ஆர்ஜன்ரீனாவின் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா மாரடைப்பால் தனது 60 ஆவது வயதில் காலமானார்.

கால்பந்தாட்டத்தில் தலைசிறந்த வீரராக கருதப்படும் மரடோனா மாரடைப்பால்  காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆர்ஜன்ரீன கால்பந்து அணியின் முன்னாள் கப்டனும், ஜாம்பவானுமான மரடோனா 1977முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச கால்பந்து அரங்கில் அசைக்கமுடியாத ஒருவராக திகழ்ந்தவர் மரடோனா.

1986 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஆர்ஜன்ரீன அணியின் தலைவராக இருந்த மரடோனா உலக கால்பந்து அரங்கில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராக பார்க்கப்பட்டவர்.

1982, 1986, 1990, 19944 ஆகிய உலக கிண்ண போட்டியில் பங்கேற்றவரான அவர் ஆர்ஜன்ரீன அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா, நபோலி, செவில்லா உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக களம் கண்டு இருக்கும் அவர் மொத்தம் 491 கிளப் போட்டிகளில் ஆடி 259 கோல்கள் அடித்து இருக்கிறார்.

10 ஆம் இலக்க சீருடைக்கு தனி மரியாதை சேர்த்த அவர் ஓய்வுக்கு பிறகு ஆர்ஜன்ரீனா உட்படட பல்வேறு அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றினார். அத்துடன் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் பெற்றார்.

இந் நிலையில் 60 வயதான மரடோனா கடந்த 2ஆம் திகதி உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் இரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவசரமாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டு இரத்த உறைவு அகற்றப்பட்டது. ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் மரடோனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது திடீர் மறைவு கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அவரது மறைவையொட்டி ஆர்ஜன்ரீனாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் உள்பட பலரும் மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: