இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையே இன்று சந்திப்பு – பொருளாதார நெருக்கங்கள் தொடர்பில் விசேட அவதானம்!

Monday, February 7th, 2022

இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு ஹைதராபாத் இல்லத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் –

இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இச்சந்திப்பின் போது, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிறிங்லாவையும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் சந்தித்து கலந்துரையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும், இரண்டு நாட்டு கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள் என்பன குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பிரதமர் நரேந்திர மோடியை நாளை (8) சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் காலமான நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் இரண்டு நாள்கள் அரசு துக்கத்தை அறிவித்துள்ளது.

அத்துடன் அவருக்கு இறுதிச்சடங்கு மற்றும் இரங்கல் தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, அதன் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை ஒத்திவைத்துள்ளது.

இதேநேரம் கோவாவில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிட்ட பேரணியும் இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: