இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் -இந்திய ஊடகம் தகவல்!

Sunday, July 2nd, 2023

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இதற்கு முன்னதாக, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று இலங்கையின் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

எனினும் படகு சேவைக்காக தேர்வு செய்யப்பட்ட துறைமுகம் மாற்றப்பட்டதால், இந்த பயணிகள் கப்பல் சேவை தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயணிகள் கப்பல் சேவைக்காக, தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் வசதிகளை அதிகரிக்க இந்தியா இன்னும் சில நாட்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கும் காங்கேசன் துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கான சாத்திய கூறுகள் தற்பொழுது காணப்படவில்லை என விமானச் சேவைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வா அண்மையில் இடம்பெற்ற காங்கேசன்துறை துறைமுக திறப்பு விழாவில் தெரிவித்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், இந்தியா மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவையினை ஆரம்பிப்பதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அது எவ்வளவு காலத்தில் முடியும் என தற்பொழுது கூறமுடியாது. அது இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடமாக இருக்கலாம். ஆனால் வேலைகள் முடிவுற்ற பின்னர் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பரிசோதனை : இன்று மாலை முடிவுகள் ...
உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெறும் தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவ...
யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பு!