இலங்கை அணியின் நிலைமை திருப்திகரமாக உள்ளது – பலமான இலங்கை அணியை உருவாக்குவதே எமது நோக்கம் – விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் நாடாளுமன்றில் தெரிவிப்பு!
Monday, November 8th, 2021இலங்கை கிரிக்கெட் அணியின் நிலைமையை பார்க்கும் போது திருப்திகரமாக உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்கியுள்ளோம், அதன் வெளிப்பாடு நன்றாக அமைந்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு பலமான இலங்கை அணியை உருவாக்குவதே எமது நோக்கமாகும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (8) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னேற்றகர செயற்பாடுகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் –
இலங்கை அணியின் கடந்த கால நிலைமையுடன் ஒப்பிடுகையில் தற்போது நல்லதொரு முன்னேற்றம் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் ஒருபுறம் பயிற்ச்சியாளர்களின் நெருக்கடி நிலைமை மற்றும் வீரர்களின் ஒழுக்கம் என்பன பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியது.
அதனால் இறுக்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. இது குறித்த விமர்சனங்களும் எழுந்தன, எனினும் இப்போது இலங்கை அணியின் நிலைமையை பார்க்கும் போது திருப்திகரமாக உள்ளது. எமது பயணம் நீண்டது, ஆனால் இப்போது அதற்கான நல்லதொரு அடித்தளம் போடப்பட்டுள்ளது.
இதேநேரம் குறைபாடுகள் உள்ளதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம், ஆனால் இம்முறை 20க்கு 20 தொடரில் எமது அணியும், தலைவரும் சரியான தீர்மானங்களை எடுத்தனர்.
ஆனால் வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் யதார்த்தம். இந்தியா அணியே இம்முறை உலக கிண்ணத்தை வெற்றிகொள்ளும் என பலர் கூறினர், அவர்களும் எம்முடன் வெளியேறியுள்ளனர்.
அனுபவம் மிக்க பலமான அணியாக மேற்கிந்தியத்தீவுகள் அணி காணப்பட்ட போதும் அவர்கள் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஆகவே விளையாட்டில் எதிர்வுகூறல்களுக்கு அப்பாலான தெளிவு அவசியம்.
எவ்வாறு இருப்பினும் நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்கியுள்ளோம், அதன் வெளிப்பாடு நன்றாக அமைந்துள்ளது.
அடுத்த 15 ஆண்டுகளுக்கு பலமான இலங்கை அணியை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அதேபோல் வீரர்களின் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது, ஏற்கனவே மூன்று வீரர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அடுத்த ஆண்டில் மீண்டும் தெரிவாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|