இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த மிச்செல் பச்லெட்டின் அறிக்கை இன்று அரசாங்கத்திடம் கையளிப்பு !

Monday, February 14th, 2022

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கை இன்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்கான பதிலை வழங்குவதற்கு வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

2009 இறுதிபோரின் போது இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான ஆவணங்ளை திரட்ட கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில் தீர்மானம் எட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த மாத இறுதியில் தொடங்கும் அதன் நாற்பத்தி ஒன்பதாவது அமர்வில் மிச்செல் பச்லெட் எழுத்து மூலமான அறிக்கையை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கையின் நகலை அரசாங்கம் இன்று பெற்றுக்கொள்ளும் என ஜெயநாத் கொலம்பகே கூறியுள்ளார்.

ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் ஆதரவுடன் தனது நிலைப்பாட்டை பாதுகாக்க இலங்கை தயாராகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அத்தோடு மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதால் இம்முறை கடினமானதாக இருக்காது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இருப்பினும் தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலத்தில் உள்ள குறைகளை ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: