இரு சிறுமிகளை அச்சுறுத்தி அலரி விதை ஊட்டப்பட்டதா? – வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை!
Friday, August 3rd, 2018இனந்தெரியாதவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு அலரி விதை ஊட்டப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு இரு சிறுமிகள் வவுனியா பொது மருத்துவ மனையில் நேற்றிரவு சேர்க்கப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வவுனியா பெரியார்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய இரு சிறுமிகளே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவரும் உறவினர்கள். இவர்கள் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் பாடப்புத்தகம் வாங்குவதற்காகச் சைக்கிளில் சென்றனர்.
அப்போது ஓட்டோவில் வந்த இனந்தெரியாதவர்கள் அவர்களை கட்டாயப்படுத்தி சாந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதுடன் கத்தி முனையில் கட்டாயப்படுத்தி அலரி விதையையும் உண்ண வைத்தனர் என்று சிறுமிகளின் உறவினர்களால் கூறப்படுகின்றது.
சிறுமிகளை காணவில்லை என்று உறவினர்கள் மாலை தேடிக்கொண்டிருந்த நிலையில் சம்பவ இடத்திலிருந்து தப்பி வீட்டுக்கு வந்த சிறுமிகள் நடந்தவற்றைக் கூறியதை அடுத்து இரவு 9 மணியளவில் மருத்துவமனையில் பெற்றோரால் சேர்க்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அலரி விதை கொடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சைகள் நேற்றிரவு வழங்கப்பட்டன என்றும் மருத்துவ சோதனைகளின் பின்னரே மேலதிக விவரங்களைக் கூற முடியும் என்றும் வவுனியா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.
Related posts:
|
|