இருதரப்பு ஒப்பந்தங்கள் பல கைச்சாத்து – பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் சீன அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்க்கின்றோம் – சீன வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022

இலங்கையின் மருத்துவ மாணவர்கள் மீண்டும் சீனா வருகை தருவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சுடன் நெருக்கமாகச் செயற்படுமாறு இலங்கைக்கான சீன தூதுவருக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங்க் ஷீ அறிவுறுத்தியுள்ளார்.

தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கை மருத்துவ மாணவர்கள் சீனாவிற்கு வருகை தருவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்டுகப்பட்டுள்ளது.

சீனாவின் மருத்துவ கல்லூரிகளில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவந்த 400 மாணவர்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரத்து 200 இலங்கை மருத்துவ மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களுக்கு மீண்டும் சீனாவிற்குச் செல்வதற்கு முடியாது போயுள்ளது.

இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது – தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு மேலும் ஒத்துழைத்தல், துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயம் ஆகியவற்றிற்கான முதலீடுகளை ஈர்த்தல், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே சுற்றுலாத்துறையை மேம்படுத்தல், இலங்கையின் ஏற்றுமதியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே பௌத்த மற்றும் கலாசார உறவினையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பினை தொடர்ந்து – பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை; கொழும்பில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான மானிய வீட்டுத்திட்டம் தொடர்பான பரிமாற்றக் கடிதம்; பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்; சிறுநீரக நோய்க்கான நடமாடும் பரிசோதனை வண்டிகளுக்கான்தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ் போன்ற  உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன:

மேலும் ‘இலங்கைக்கு தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு சீனா தொடர்ந்தும் செயற்படும்’ என்பதனையும் சீன வெளியுறுவு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்

இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறுகையில் – இந்த ஆண்டு நம் இரு நாடுகளுக்கும் மிக முக்கியமான ஆண்டாகும். இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 65 வது ஆண்டு நிறைவையும், இரப்பர் அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70 வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்க எனக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள். இந்த முக்கியமான மைல் கல்லை குறிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி விசேட நினைவு நாணயத்தை வெளியிட்டது உங்களுக்குத் தெரியும்.

கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக நாம் போராடுவதற்கான சீனாவின் ஒத்துழைப்பிற்கு சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சைனோஃபார்ம் தடுப்பூசிகளின் தொடர்ச்சியான விநியோகம் எங்கள் தடுப்பூசி திட்டத்தின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.

ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையின் பொருளாதாரமும் தொற்றுநோய் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே. நமது பொருளாதார மீட்பு மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கான சீனாவின் ஆதரவை நாங்கள் நன்றியுடன் பாராட்டுகிறோம்.

இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் சீனா போன்ற நட்பு நாடுகளின் ஆதரவுடன், இந்த சவால்களை விரைவில் சமாளிக்க முடியும் என நாம் நம்புகிறோம். பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் உங்களுடனும் சீன அரசாங்கத்துடனும் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்க்கின்றேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: