ஆழிப் பேரலையில் சிக்கி ஆகுதியானவர்கள் அத்தனை பேருக்கும் ஆத்ம சாந்தி கிடைக்கட்டும்!

இந்தச் சொல்லை எவரும் முன்னரே அறிந்திருக்கவில்லை. அதன் ஆபத்துப் பற்றியும் அதுவரை எவரும் தெரிந்திருக்கவுமில்லை.
ஜப்பானிய மொழியில் சுனாமி என்றால் பேரலை என்று அர்த்தம்.
இலங்கை மக்கள் சுனாமி என்ற சொல்லை மிக அதிகமாக உச்சரித்தது 2004அம் ஆண்டு மார்கழி மாதம் 26ஆம் திகதி காலையில்தான்.
இந்தோனேசியாவின் ஆழ் கடலில் பூமித்தட்டில் ஏற்பட்ட அதிர்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரளயம் அது.
கடல் நீரை உள்வாங்கிக் கொண்ட கடல்தாய் தன் கட்டுப்பாடு கடந்து கரை கடந்து பாய்ந்து ஆடிய ஊழித் தாண்டவம் அது.
கடல் நீர் பின்வாங்கிப் போய்விட்டது என்று வயதுக்கு வந்ததுகளும் பிஞ்சுகளும் வேடிக்கையோடு வியந்து பார்த்து பரவசத்தோடு கடல் தாயை தொட்டு மகிழ்ந்த தருணம் அது.
உள்வாங்கிச் சென்ற கடல் பெரும் போர்க்குணத்தோடு கரை தாண்ட வந்தபோது பிஞ்சுகளையும் பார்க்கவில்லை பழுத்ததுகளையும் பார்க்கவில்லை.
எழுந்து வந்த அலைகள் கரையோரக் குடியிருப்புகளையும் கடலை நம்பி வாழ்ந்தவர்களை புரட்டிப் புரட்டி உருட்டி விளையாடிய பொல்லாத தருணம் அது.
ஊரெல்லாம் ஓலம் கண்முன்னே மரணம் என்று அந்தப் பொழுதில் கடல் தாயின் ஊழித் தாண்டவத்திற்கு முன் நிற்க முடியாமல் மனித குலம் நிராயுதபாணியாக நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாமல் விழி பிதுங்கி நின்றதை இப்போது நினைத்துப்பார்த்தாலும் நெஞ்சம் வலிக்கின்றது.
அம்மாவை அப்பாவை அண்ணாவை அக்காவை பிள்ளைகளை தம்பியை தங்கச்சியை உறவுகளை கண்முன்னெ துடிதுடிக்கப் பறிகொடுத்து எஞ்சிய மனிதர்கள் ஆழிப் பேரலையால் அகதியாக்கப்பட்டு அழுது நின்றார்கள்.
வாழ் நாளெல்லாம் கரையிலேயே எழந்து வீழ்ந்துவிடும் கடல் அலையா இப்படி ஆழிப் பேரலையாக அழித்துச் சென்றது?
நாங்கள் பொழு போக்காகக் கால் கழுவி மகிழ்ந்தும் கடல் தொழில் செய்து வாழவும் குறையாத செல்வத்தை அட்சய பாத்திரமாகக் கொண்ட இந்தக் கடலின் மடியிலா இந்த ஊழித் தாண்டவத்தின் ஒத்திகையும் நடந்தது?
என்று நாங்கள் அதிர்ச்சியோடும் ஏமாற்றத்தோடும் ஒடுங்கிக் கிடந்த அந்த துயரச் சம்பவம் நடந்து இன்று 13 வருடங்கள் நிறைவடைகின்றது.
ஆண்டுகள் பதின் மூன்று கடந்துவிட்டபோதும் மாண்டார் எவரும் மறுபடியும் மீண்டார் இல்லையே.
இழந்த உறவுகளை எண்ணியும் பறிபோன வாழ்க்கையை எண்ணியும் அழுது புலம்பி ஆறுதலடைவதைத் தவிர சாதாரண மனிதர்களால் வேறு என்ன செய்ய முடியும்.
ஊழித் தாண்டவம் ஆடி முடித்த கடல் தாயே எங்கள் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாமலும் இழுத்துச் சென்ற எங்கள் உறவுகளை மீட்டுத்தர முடியாமலும் மௌனித்துக் கிடக்கிறாள்.
மலர்களை சொரிந்தும் விளக்குகள் ஏற்றியும் உறவுகளை எண்ணி அஞ்சலி செய்கின்றோம் பெருந்தவறு செய்த குற்ற உணர்ச்சியோடு கடல் தாய் பார்த்திருக்கின்றாள்.
ஆழிப் பேரலையில் சிக்கி ஆகுதியானவர்கள் அத்தனை பேருக்கும் ஆத்ம சாந்திக்காக நடக்கும் வேண்டுதல்கள் ஏற்றுக்கொள்ளப்படட்டும்.
உறவுகளின் ஆத்ம சாந்திக்காக உங்கள் EPDPNEWS.COM இணையத்தளம் பஷ்பாஞ்சலிகளை சமர்ப்பணம் செய்கின்றது.
Related posts:
|
|