அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தல் அதனை சீர்திருத்தம் செய்தல் ஆகிய சந்தர்ப்பங்களுக்கு மாத்திரமே நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும். – அமைச்சர் பந்துல குணவர்தன!

Thursday, April 23rd, 2020

அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றினை மீள ஒன்றுக்கூட்டும் அதிகாரம் ஜனாதிபதியை தவிர்ந்த வேறு எவருக்கும் கிடையாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு  அடுத்துவரும்  மூன்று மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது.

ஆனாலும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் சூழ்நிலைக்கு ஏற்ப அது ஒத்திவைக்கப்படலாம் என்ற நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணைக்குழுவால் தேர்தல் மீண்டும் ஜுன் மாதம் 20 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எதிர்த்தரப்பு அரசியல் தரப்புகளால் பழைய நாடாளுமன்றத்தை மீளவும் கூட்டப்படவேண்டும் என கூச்சலிடப்படுகின்றது. இந்நிலையிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில் – அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தல் மற்றும் அதனை சீர்திருத்தம் செய்தல் ஆகிய சந்தர்ப்பங்களுக்கு மாத்திரமே நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும்.

அத்துடன் ஏற்கனவே காணப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு எந்தவித தேவையும் ஏற்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டள்ளார் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: