சூழல் பாதுகாப்பு தொடர்பாக தீர்மானங்களை சவாலுக்குட்படுத்த  முடியாது -ஜனாதிபதி!

Monday, June 6th, 2016

நாடெங்கிலும் இடம்பெற்றுள்ள சூழல் அழிவுகளுக்கு மத்தியில் சூழல் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத வர்த்தகங்களை மேற்கொண்டு சூழலுக்கு சேதங்கள் விளைவிக்கப்படுமானால் அவற்றைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது சகல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களுக்கு சார்பாக சுற்றாடல்துறை அமைச்சர் என்ற வகையிலும் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் தாம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று மாத்தளை எட்வட் மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச சூழல் தின தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி,

நாடெங்கிலும் இடம்பெறும் சூழல் அழிவுகளைத் தடுத்து சூழலைப் பாதுகாப்பதற்கு புதிதாக சிந்தித்து புதிய நிகழ்ச்சித் திட்டங்களின் படி செயற்படுவது அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகளின் கடமை.

சூழல் தொடர்பான பொறுப்புக்களை நிறைவேற்றுகையில் எப்போதும் எச்சரிக்கையை பார்க்கிலும் முன்மாதிரி மேலானது.கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற சூழல் அழிவுகள் தொடர்பான பொறுப்பில் ஒரு பகுதியை எமது அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இப்படியான நிலைமைகளைத் தவிர்ப்பதற்கு சட்டம், அதிகாரம் மற்றும் பொறுப்புக்கள் இருந்தும் அதனை நிறைவேற்றாததன் பெறுபேறுகளை இன்று முழு நாடும் அனுபவிக்கின்றது.இந்நிலையில், சூழலைப் பாதுகாப்பதற்கு ஊடக நிறுவனங்கள் வழங்கும் பங்களிப்புகளும் போதுமானதாக இல்லை.

அதுதொடர்பாக குரல் எழுப்புவதற்கு தேசிய செய்திப் பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டியது யுகத்தின் தேவையாகும்.

வடக்கில் இடம்பெறும் காடழிப்புகள் தொடர்பாக சுற்றாடல் துறை அமைச்சர் என்றவகையில் தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.கடந்த ஆட்சியில் 2013ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு அரசியல் தீர்மானத்தின் காரணமாக அத்தகைய ஒரு நிலைமைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது தொடர்பாக முதன்முறையாக முப்படையினரை ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நாட்டின் காடுகள் தொடர்பாக வாரத்திற்கு ஒரு முறை கண்காணிக்கும் பொறுப்பு விமானப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.மரங்களை வெட்டி படகுகள் மூலம் கொண்டு செல்பவர்களை கண்டறியும் பொறுப்பு கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சூழல் அழிவுகளை மேற்கொள்வோருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு இராணுவத்திற்கும், பொலிசாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.சூழலைப் பாதுகாக்கின்ற பொறுப்பு ஒரு அரசியல் கட்சியினதோ அல்லது நிறுவனத்தினதோ மட்டுமல்ல.

சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டியது நாளைய தலைமுறைக்காக நாம் நிறைவேற்றும் கடமையும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இந்நிகழ்வில் மகாசங்கத்தினர் உட்பட ஏனைய சமயத் தலைவர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: