வித்தியா படுகொலை – பிரதிவாதிகளின் வாக்குமூலம் பதிவு!

Tuesday, August 29th, 2017

மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில்  Trial at Bar தொடர் விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பமானது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளின் சாட்சியங்கள்  நேற்றுமுதற்தடவையாக யாழ். மேல் நீதிமன்றத்தில் நெறிப்படுத்தப்பட்டன.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் இந்த விசாரணை நடைபெறுகின்றது.

விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார இரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளனர்.

முதலாம் இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இலக்க பிரதிவாதிகள் சாட்சிக்கூண்டில் ஏறி பிற்பகல வரை சாட்சியமளித்தனர். இரண்டாம் மூன்றாம் மற்றும் 04 ஆம் இலக்க பிரதிவாதிகள் சாட்சியம் வழங்கிய போது, பொலிஸார் தங்களின் கைகளை பின்பக்கமாகக்கட்டி, கயிற்றினால் உயர்த்தி, பொல்லுகளால் தாக்கி வாக்குமூலம் பதிவு செய்ததாகக் கூறியுள்ளனர்.

வாக்குமூலம் சிங்களத்தில் எழுதப்பட்டமையால் அதில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தங்களுக்கு தெரியாது எனவும் அவர்கள் சாட்சியமளித்துள்ளனர். பொலிஸாரின் பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதாக இரண்டாம் மூன்றாம் மற்றும் 04 ஆம் இலக்க பிரதிவாதிகள் Trial at Bar விசாரணை மன்றில் சாட்சியமளித்துள்ளனர்.

இதன்போது குறுக்கிட்ட வழக்கு தொடுநர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் குணரட்ணம், எதிரிகளிடம் தாக்குதல் நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகக் கூறப்படுவதை முற்றாக நிராகரிப்பதாகக் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முறைப்பாடு செய்யப்படவில்லை எனவும் பிரதி சொலிஸிட்ட ஜெனரல், நீதிபதிகள் முன்னிலையில் கூறியுள்ளார்.

இதற்கு பதில் வழங்கிய பிரதிவாதிகள், ஊர்காவற்துறை நீதவானின் சமாதான அறையில் இது தொடர்பில் நீதவானிடம் தனிப்பட்ட ரீதியில் தாம் கூறியதாக மன்றில் கூறியுள்ளனர். எனினும், நீதவானின் பதிவுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, நான்காம் இலக்க பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மகாலிங்கம் சசிந்திரன் சாட்சியமளித்தார். 2015 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை தான் கொழும்பிலிருந்ததாகவும், அதற்கான சி.சி.ரி.வி ஔிப்பதிவுகள் ஏற்கனவே வழக்கு தொடுநர் சார்பில் மன்றிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் மே மாதம் 17 ஆம் திகதி சின்னாம்பி எனப்படும் துஷாந்தனுக்கு காசு வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் தனது அண்ணனான சுவிஸ் குமார் கைது செய்யப்பட்டதாக தொலைபேசியூடாக தகவல் கிடைத்ததாகவும் நான்காம் இலக்க பிரதிவாதி கூறியுள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் தனக்கும் பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், தான் புங்குடுதீவிலிருந்து குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு சென்ற போது பொலிஸ் காவலரணுக்கு பின்பக்கமாக தனது தம்பியான நிஷாந்தன் நிர்வாணமாகக் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தார் எனவும் மகாலிங்கம் சசிந்திரன் இன்று சாட்சியமளித்துள்ளார்.

18 வினாக்கள் அடங்கிய வினாக்கொத்து ஒன்றை பொலிஸார் வைத்திருந்ததாகவும், அதற்கான சரியான பதில் வழங்கினால் விடுவிக்கப்படுவீர் எனவும், குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டு கையொப்பமிடுமாறு பணிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு கையடக்க தொலைபேசியில் ஔிப்பதிவு செய்யப்பட்டதாகவும் மகாலிங்கம் சசிந்திரன் கூறியுள்ளார்.

பின்னர் ஊர்காவற்துறை நீதவானின் வாசஸ்தலத்திற்கு அழைத்து சென்று 24 மணித்தியால தடுப்புக்காவலுக்கான உத்தரவை பொலிஸார் பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார் மறுநாள் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் தங்களை அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் காயங்கள் தொடர்பில் பதிவு செய்துகொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

வித்தியாவின் மூக்குக்கண்ணாடியைப் பெறுவதற்காக நீதிமன்ற அனுமதியுடன் தடுப்புக்காவலில் இருந்த தம்மை புங்குடுதீவிலுள்ள தமது வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும் மகாலிங்கம் சசிந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள நான்காம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டு தம்மிடம் இரண்டு தடவைகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தனது மனைவியையும் பிள்ளைகளையும் இழக்கும் தருவாயில் தாம் இருப்பதால், இந்த வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறும் மகாலிங்கம் சசிந்திரன் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான அதிகாரங்கள் அந்த நீதிமன்றத்திடமே காணப்படுவதாகவும் நீதிபதி இளஞ்செழியன் கூறியுள்ளார்.

ஐந்தாம் இலக்க பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி குறுக்கிட்டு யாழ். சட்ட வைத்திய அதிகாரி மயூரனை மேலதிக விசாரணைக்காக மன்றுக்கு மீள அழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட Trial at Bar விசாரணை மன்றம் சட்ட வைத்திய அதிகாரிக்கான அழைப்பாணையை விடுத்துள்ளது

Related posts: