அரசியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்ட எவரும் தற்போது சிறைச்சாலைகளில் இல்லை – நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு!

Wednesday, February 10th, 2021

அரசியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்டுள்ள அல்லது தடுத்துவைக்கப்பட்டுள்ள எவரும் தற்போது சிறைச்சாலைகளில் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் இடம்பெற்ற பிரதமரிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமனற் உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அரசியல் கைதிகள் மற்றும் காணி விவகாரம் தொடர்பில் வினவினார்.இதற்கு பதிலளித்தபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில் –

இலங்கை குற்றவியல் தண்டனை சட்டக் கோவையின் கீழும், நாட்டிலுள்ள வேறு எந்தவொரு சட்டத்தின் கீழும் தண்டனை வழங்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் அல்லது சந்தேகநபர்கள் ஆகியோருக்கிடையே, அரசியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்டுள்ள அல்லது தடுத்துவைக்கப்பட்டுள்ள எவரும் தற்போது இலங்கை சிறைச்சாலைகளில் இல்லை என்பதை இந்த சபைக்கு அறியப்படுத்த விரும்புவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நாடுமுழுவதும், மாவட்டங்களின் அடிப்படையில், பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் பதிலளிப்பது, தேசிய பாதுகாப்புக்கு நேரடியாக தாக்கம் செலுத்துவதனால், அது குறித்து பதிலளிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சினால் அறியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: