அமைச்சர் டக்ளஸின் ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர்களால் கிளிநொச்சியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்டுகிறது பொருளாதார அபிவிருத்தி விழிப்புணர்வு!

Thursday, February 4th, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பொருளாதார அபிவிருத்தி ஊடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான திட்டம் தொடர்பான விழிப்புணர்வூட்டல் நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி என்று கிளிநொச்சியின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 95 கிராம சேவையாளர் பிரிவுகளில் இதுவரையில் 53 இடங்களில் இந்தப் பொருளாதார மேம்பாட்டு விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழான மனைப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பழமரக்கன்றுகள் விநியோகத்துடன் இணைந்ததாக, மாவட்ட ஒருங்குணைப்புக்குழு இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன், மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோர் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

வீட்டுத்தோட்ட முயற்சியிலிருந்து ஆரம்பித்து, விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தி, கைத்தொழில்துறை வளர்ச்சியூடாக, விவசாய உற்பத்திகளின் பெறுமதிசேர் உற்பத்திகளைச் செய்து, பரந்த சந்தைவாய்ப்புக்களைக உருவாக்குவதன் மூலம் விவசாய உற்பத்திகளுக்கான கூடுதல் வருமானத்தை விவசாயிகள் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் தொடர்பாக இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்குகளில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் நேரடியாக வெளிமாவட்டங்களுக்கு நெல் உற்பத்திகள் ஏற்றுமதியாவதைக் குறைத்து, உள்ளூரிலேயே நெல்லை அரிசியாக்கி, மாவாக்கிச் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும், இதற்குத் தேவையான உலர்த்திகள், களஞ்சிய வசதி, அரிசி ஆலைகளை விரிவாக்குவது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து இந்தக் கருத்தரங்குகளில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு கிளிநொச்சியில் உற்பத்திசெய்யப்படும் விவசாய உற்பத்திகள் மற்றும் பெறுமதிசேர் உற்பத்திகளுக்கான பரந்த சந்தைவாய்ப்பை உருவாக்கும் வகையில், விரைவில் அமுல்ப்படுத்தப்படவிருக்கும் விவசாய பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாகவும் இதன்போது இணைப்பாளர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர்.

இவ்வாறு விவசாய உற்பத்திகளை பெறுமதிசேர் உற்பத்திகளாக்குதல், அவற்றுக்கான சந்தைவாய்ப்பை விரிவாக்குதல், கைத்தொழில்துறை, நவீன விவசாயச் செயற்பாடுகளுக்கான ஆளணியாக இளைஞர்களை தொழில் தேர்ச்சி மிக்கவர்களாக உருவாக்குதல் என, கிளிநொச்சியின் பொருளாதார அபிவிருத்திக்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்துவரும் முக்கோண பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக, கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலையைப் போக்கி விரைவில் பொருளாதார தன்னிறைவுகொண்ட மாவட்டமாக கிளிநொச்சியை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் இணைந்து பணியாற்றுமாறு கிராமம்தோறும் மக்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு ஊடாக அறைகூவல் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கருத்தரங்குகளை, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர்களுடன், கிராமசேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுரத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள், வட்டாரக்குழு உறுப்பினர்கள் என பலரும் இணைந்து கூட்டு முயற்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: