அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு – தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளிப்பு!

Saturday, February 24th, 2024

அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதிமுதல் நேற்று 23 ஆம் திகதிவரை விஜயம் செய்த அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் மற்றும் தூதுக்குழுவினர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் விரிவான கலந்துரையாடல்களில் இருவரும் ஈடுபட்டனர்.

இதனிடையே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மரியாதை நிமித்தம் சந்தித்திருந்தார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளிப்பதற்காக அமெரிக்கா வழங்கிய மனிதாபிமான மற்றும் அவசரகால உதவிகளைப் பாராட்டிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி, அண்மையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனைய தனியார் நிறுவனத்துக்கு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் வழங்கிய 553 மில்லியன் அமெரிக்க டொலர் அபிவிருத்தி உதவியை வரவேற்றார். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் உதவியையும் அவர் பாராட்டினார்.

இந்துசமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைவராக இலங்கையின் முன்னுரிமைகள் மற்றும் அனைவரும் வரி செலுத்துவதற்கான சுதந்திரத்தை மேம்படுத்தி, வர்த்தகம் மற்றும் வணிகத்தை எளிதாக்குவதற்காக பசுமைப் பொருளாதாரம் மற்றும் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, பிரதி இராஜாங்க செயலாளர் வர்மாவிடம் விளக்கினார்.

ஆட்சி, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்குமான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்தும் அவர், பிரதி இராஜாங்க செயலாளருக்கு எடுத்துரைத்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதி இராஜாங்க செயலாளர் வர்மா, பொருளாதார செழிப்பை நோக்கி நாட்டுக்கு தொடர்ச்சியான அமெரிக்க உதவிகளை வழங்குவதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: