அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் உருவாக்கும் நோக்கில் கல்வி சீர்திருத்தம் – ஏப்ரல் மாதம்முதல் 33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளவும் நடவடிக்கை – என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Thursday, March 23rd, 2023

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்..

நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் – கல்வியற் கல்லூரி ஆசிரியர்களின் பெறுபேறுகள் மார்ச் 30ஆம் திகதி வெளியிடப்பட உள்ளன. இதன்படி, மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை குறைப்பதற்காக இந்த 7500 ஆசிரியர்களையும் பணியமர்த்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது அரச சேவையில் பணிபுரியும் பயிலுனர்களை, ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காகக நடத்தப்படும் போட்டிப் பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தப் பரீட்சைக்கு 53,000 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதுடன் அவர்களில் 26,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள உள்ளோம். அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம்முதல் இந்த 33,000 ஆசிரியர்களையும் பாடசாலை கட்டமைப்புக்கு உளவாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் பிரதான நகரங்களான கொழும்பு, கண்டி, கம்பஹா பிரதேசங்களின் பாடசாலைகளில் பாகுபாடு காணப்படுகின்றது. இதன் காரணமாக பெருந்தொகையான மாணவர்கள் நகர்புர பாடசாலைகளுக்கு வருவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனால், அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். எதிர்வரும் கல்வி சீர்திருத்தத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டுக்கான இறுதித் தவணை நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை (27) முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: