அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்குங்கள் – பிரதமரிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!

Wednesday, June 16th, 2021

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்கி கொரோனான காலத்தில் தாம் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு பரிகாரம் வழங்குமாறு நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் குறித்த சங்கதிதின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் –

நாட்டில் கொரோனா தொற்று அபாய நிலையில் உள்ளதால் பல்வேறு கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இவ் வருடத்தில் மூன்று மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில் மாணவர்களுடைய கல்வியை நிகழ்நிலை மூலம் புதுப்பிப்பதற்காக தேவையான கருவிகளை மற்றும் டேட்டாக்களை தங்கள்  தனிப்பட்ட செலவில் கொள்வனவு செய்வதன் மூலமே ஆசிரியர்கள் கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம் தரம் 1 ஆசிரியரின் குறைந்தபட்ச தினசரி ஊதியம் சுமார் ஆயிரத்து 498 ரூபா  வாக உள்ள நிலையில் 2-1 2 -2 3 -1 மற்றும் 3 -2 தர நிலைகளிலுள்ள ஆசிரியர்களின் தினசரி சம்பளம் இதைவிடக் குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது. இந்தச் சூழ்நிலையில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் கடுமையான பொருளாதார கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

மேலும், சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமது தனிச் சம்பளத்தில் மாத்திரமே வாழ்க்கையைக் கொண்டு நடத்துகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ள உபதலைவர் பிரதீப் தனியார் வகுப்புகள் நடத்துவது, வேறு பல வருமானங்களை நம்பி கடன் வாங்கிய ஆசிரியர்கள் அனேகமானோர் தற்போதைய சூழ்நிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியர்களின் இத்தகைய நிலையை கருத்திற்கொண்டு குருசேதா போன்ற பல்வேறு வங்கிக் கடன் திட்டங்களால் பெறப்பட்ட கடன்களுக்கான மாதாந்த தவணைகளையும் அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜுன் மாதத்திலிருந்து மீண்டும் பாடசாலைகள் திறக்கும்வரை கடன் தள்ளுபடி வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை கேட்டுக்கொள்கிறது.

மேலும் நாட்டில் நாளுக்கு நாள் உயரும் வாழ்க்கை செலவுகள் மத்தியிலும், மிகக் குறைந்த சம்பளத்துடன்  மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுப்பதற்கு நீண்ட காலமாக பணியாற்றிவரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இந்தச் சலுகையை வழங்குவது தங்களின் பொறுப்பென்று பிரதமரிடம் நாங்கள் கோரிக்கைவிடுத்தள்ளதாக ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் உபதலைவர் பிரதீப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: