அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அரைசொகுசு பேருந்துகள் சுற்றுவளைப்பு!

Monday, July 25th, 2016

சேவையின்போது ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அரைசொகுசு பேருந்துகளை சுற்றுவளைக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களின் நிபந்தனைகளை மீறி அரைசொகுசு பேருந்துகளில் ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றிச் செல்ப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ.ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.

இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளிலேயே இவ்வாறன சம்பவங்கள் அதிகம் பதிவாகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அரைசொகுசு பஸ்களில் பயணிக்கும் மேலதிக பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய, அந்த பேருந்துகளின் சாரதிக்கும் நடத்துனருக்கும் தற்காலிக தடை விதிக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலதிகமாக ஏற்றிச் செல்லும் பயணிகளின் அடிப்படையில் தலா ஒரு பயணிக்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் சாரதிகளுகம் நடத்துனர்களும் சேவையிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் பயிற்சி பாசறைக்கும் அவர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் எம்.பி.ஏ.ஹேமசந்திர கூறியுள்ளார்.இதனை தவிர, மேலதிகமாக ஏற்றிச் செல்லும் பயணிகளின் அடிப்படையில் தலா 100 ரூபா என்ற வீதத்தில் பேருந்து உரிமையாளரிடமும் அபராதம் அறவிடப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ.ஹேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: