வைத்தியசாலையிலிருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்!

Wednesday, July 27th, 2016

பொலிஸ் பாதுகாப்பு வழங்காமையினால் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய சம்பவம் ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

யாழ்.நாவாந்துறை பகுதியில் உள்ள இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட தகராற்றின் காரணமாக குறித்த இளைஞர் நேற்று (26) யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார். தடுப்பில் வைத்திருந்த போது, கையில் சிறுகாயம் ஏற்பட்டதால் அவர், இன்று (27) அதிகாலை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு, சந்தேக நபருக்கு பொலிஸ் பாதுகாப்பினை ஏற்படுத்தாது, பொலிஸார் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு சென்றுவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.

பொலிஸார் மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்ற போது, அங்கு சந்தேகநபர் இல்லை. தப்பியோடிய சந்தேகநபரின் வீட்டிற்கு சென்று பொலிஸார் தேடுதல் நடத்திய போதும், குறித்த சந்தேக நபரை காணவில்லை. தப்பியோடிய சந்தேகநபர் மீண்டும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Related posts: