வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையிட்ட வெளிநாட்டவர் கைது!

Saturday, August 27th, 2016

வென்னப்புவ நகரில் வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் வர்த்தக நிலையத்தில் 5 இலட்சத்து 91 ஆயிரத்து 750 ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இரண்டு ஈரான் பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ நகரில் உள்ள இந்த வர்த்தக நிலையத்தில் கடந்த 10 ஆம் திகதி சந்தேக நபர்கள் இந்த பணத்தை கொள்ளையிட்டுள்ளனர். ஈரான் பிரஜைகள் தம்மிடம் உள்ள வெளிநாட்டு நாணயத்தை மாற்றுவது போல் நடித்து வர்த்தக நிலையத்தில் இருந்த ஆயிரம் அமெரிக்க டொலர், 850 சவூதி ரியால், 3 ஆயிரம் டிராம் நாணயங்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நாணயம் மாற்றும் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் சந்தேக நபர்களின் படங்கள் பதிவாகியிருந்தன. இதனை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி பொலிஸார் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர். இதனையடுத்து ஈரான் பிரஜைகள் நாட்டில் இருந்து வெளியேற மாரவில மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்தது.

சந்தேக நபர்கள் இலங்கையில் தங்கியிருப்பதற்காக வீசா காலாவதியான நிலையில், இவர்கள் ஈரான் தூதரகத்திற்கு சென்றுள்ளனர். தூதரக அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைக்கு அமைய சந்தேக நபர்கள் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நேற்று இரவு வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.

சந்தேக நபர் நாட்டின் வேறு பகுதிகளில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார்களா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி வருவதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: