ஜனநாயகம் குறித்து இலங்கைக்கு எவரும் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, January 27th, 2021

ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலையில் இலங்கை இல்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பைடனின் வெற்றி முக்கியமானது என்பதை வலியுறுத்தியுள்ள அதேவேளை பைடன் தனது நாட்டில் ஒழுங்கை ஏற்படுத்தவேண்டிய நிலையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மீள ஏற்படுத்தவேண்டிய நிலையில் காணப்படுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், அமெரிக்காவில் குறித்த விடயங்கள் கடந்த வருடம் அழிக்கப்பட்டுவிட்டன எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உலகின் மனித உரிமைகள் குறித்து நேர்மையான அக்கறையை கொண்டிருந்தால் இலங்கை மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடில்லை என்பதையும் நாட்டில் தற்போது அமைதி நிலவுகின்றது என்பதை நாங்கள் நினைவுபடுத்தவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை ஒரு வன்முறை நாடில்லை. இங்கு வன்முறைகள் இடம்பெறவில்லை. ஏனைய நாடுகளில் இடம்பெறும் சிறிய சம்பவங்களே இடம்பெறுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் இன மத ஐக்கியம் நிலவுகின்றது என்றும் இதனை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பைடனின் நிர்வாகம் காழ்ப்புணர்ச்சி மற்றும் தீவிர வலதுசாரி கருத்துக்கள் மற்றும் அணுகுமுறைகளைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கர்களைக் கொன்று குவிக்கும் COVID-19 ஐ எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: