யாழ்.மாவட்டத்தில் காசநோயை கட்டுப்படுத்தத் துரித நடவடிக்கை – வைத்தியர் மணிவாசகன் தெரிவிப்பு!

Thursday, January 12th, 2017

 

யாழ்ப்பாணத்தில் காசநோய்த் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை முற்றாகக் கட்டுப்படுத்த நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று யாழ். மாவட்டக் காசநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்தியர் ஆர்.மணிவாசகன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

காசநோயை முற்றாகக் கட்டுப்படுத்தவும் நோயாளிகளைப் பூரணமாக குணப்படுத்தவும் அரச காசநோய் மருத்துவமனைகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. யாழில் அதிகரித்துவரும் காசநோய்த் தாக்கத்தை முற்றாகக் கட்டுப்படுத்த நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதற்காக கடந்த வருடம் 8புதிய ஆய்வு கூட உதவியாளர்களை உள்வாங்கியுள்ளோம்.

இவர்கள் தற்போது ஊர்காவற்றுறை, வேலணை, யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு, சங்கானை, நெல்லியடி, பருத்தித்துறை, பண்ணை காசநோய் வைத்தியசாலை, கோப்பாய் ஆகிய இடங்களில் கடமையாற்றி வருகின்றனர்.

இவர்கள் நோயாளர்கள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் காசநோயாளர்களுக்கு தினமும் காலையில் சுகாதகார ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து அளிக்கப்படும் சிகிச்சை மருந்துகளின் பக்க விளைவுகள் பற்றி அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன. அத்துடன் உளவியல் தாக்கங்கள் ஏற்படாதவாறு உளவியல் மனோதத்துவ நிபுணர்களால் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றிவரும் யாழ்ப்பாணம், கொழும்பை சேர்ந்த 2 நிபுணர்கள் யாழ்.பண்ணை காசநோய் வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சையளித்து வருகின்றனர். செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் ஒரு நிபுணரும் புதன், சனி போன்ற தினங்களில் ஒருவருமாக வருகை தருகின்றனர்.

ஒருவருக்கு காசநோய் அறிகுறிகள் காணப்படுமிடத்து அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், நோயாளியுடன் நெருங்கிப் பழகும் நபர்கள் ஆகியோரையும் அழைத்து அவர்களின் சளி மாதிரிகளும் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன. இவ்வாறு நாங்கள் பரிசோதித்து காசநோயாளர்கள் அதிகம் இணங்காணப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கி வருகின்றோம். என்றார்.

lungs

Related posts: