மீனவர்களைத் தடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்தது கடற்றொழில் திணைக்களம்!

Sunday, November 6th, 2016

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக கடலுக்குச் சென்ற மன்னார் மீனவர்களை கடற்றொழில் திணைக்களம் தடுத்ததாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை கடற்றொழில் திணைக்களம் நிராகரித்துள்ளது.

சிலிண்டர் இன்றி மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதி, ஒரு படகிற்கு 8 பேர் என்ற நிபந்தனையில் கடற்றொழில் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் பி.எஸ்.  மிராண்டா தெரிவித்தார்.

எனினும், மூன்று பேர் மாத்திரமே ஒரு படகில் செல்ல முடியும் எனக்கூறி நேற்றைய தினம், மன்னார் மாவட்ட மீனவர்கள் கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.இதனையடுத்து, சம்பவ இடத்திற்குத் தான் சென்றதையடுத்து, கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதியளித்ததாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இதற்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரியதாககடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்டப் பணிப்பாளர் பி.எஸ், மிராண்டா குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டமை தொடர்பில், கடற்படையின் மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதி, தம்மீது குற்றஞ்சாட்டியதாகவும் பி.எஸ். மிராண்டா சுட்டிக்காட்டினார்.

மீனவர்கள் இலகுவாக தொழில் செய்வதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதே தமது நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, மன்னார் மாவட்ட மீனவர்கள் வழமைபோன்று இன்று கடற்றொழிலில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், கடற்றொழிலுக்கு செல்வதற்கு கால தாமதமாகவே கடற்படையினர் அனுமதித்ததாக மீனவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவியிடம் வினவுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

எவ்வாறாயினும், மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட அனுமதி அட்டை நடைமுறை தொடர்பில் கடற்படையினர் ஆராய்ந்ததாகவும், மீனவர்கள் தடுக்கப்பட்டமைக்கும் கடற்படைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் கடற்படை ஊடக பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

fishermen-2

Related posts: