வறிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Tuesday, July 18th, 2023

வறிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டண அதிகரிப்பு காரணமாக நீர் வழங்கல் துறை பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளமையினால் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே கட்டண உயர்வு இடம்பெறும். உத்தேச திட்டம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிரணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானால் நீர் கட்டணம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கூறியிரந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்துவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தேன். மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நீர்வழங்கல் துறையை நிர்வகிப்பதற்கு 425 மில்லியன் ரூபா செலவு ஏற்படுகின்றது. இதற்கு மேலதிகமாக 2 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா கடனும் செலுத்தப்படுகின்றது. இதுவரை காலமும் முறையான நடவடிக்கை இடம்பெறாமை இதற்கு காரணமாகும். அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கையாகவே இது இடம்பெறுகின்றது.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நீர் கட்டணம் உயர்த்தப்படும். நாடாளுமன்றத்தில் நாளை (19.07.2023) ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது இது பற்றி தெளிவுபடுத்தப்படும்.

ஒரு குடும்பத்தில் ஐவர் இருந்தால் 15 முதல் 20 அலகுகள்தான் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கும், சமுர்த்தி பயனாளிகளுக்கும் நீர் கட்டண உயர்வால் தாக்கம் ஏற்படாது. நீர் கட்டண அதிகரிப்பு யோசனை எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டும் என்ற நோக்கம் எமக்கு இல்லை.

நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் அண்மையில் கூட்டமொன்றை நடத்தியிருந்தேன். இதில் எதிரணியினர் பங்கேற்கவில்லை. அன்று இல்லாத அக்கறை இன்று திடீரென ஏன் வந்துள்ளன? தூங்குபவரை எழுப்பலாம். தூங்குபவர்போல் நடிப்பவரை எழுப்ப முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: