நிதிமோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி பணியாளர்கள் ஐவர் பணி நீக்கம்!

Thursday, July 12th, 2018

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி பணியாளர்கள் ஐவர் நிதி மோசடிக் குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா மாவட்ட சமுர்த்தி நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது:

சமுர்த்திப் பயனாளிகளின் பெயர் விபரங்கள் மூலம் வவுனியா புளியங்குளம் சமுர்த்தி வங்கியில் கடன்களுக்கு விண்ணப்பித்து கடன்தொகையைப் பெற்று நிதி மோசடி செய்தனர் என்று வவுனியா மாவட்டச் சமுர்த்திப் பணிப்பாளர் சிலர் மீது கடந்த காலங்களில் குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து மாவட்ட சமுர்த்தித் திணைக்களம் இது தொடர்பாக குழு அமைத்து விசாரணை செய்தது.

பின்னர் வவுனியா மாவட்ட சமுர்த்தி இயக்குநரின் வேண்டுகோளுக்குகமைய கொழும்பில் உள்ள சமுர்த்தித் திணைக்களத்தின் தலைமை பணிமனையின் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. விசாரணைகளின் முடிவுகளின் பிரகாரம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஐவர் குறித்த குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த ஐவரையும் பதவியில் இருந்து நீக்குமாறு சமுர்த்தித் தலைமை அலுவலகத்தில் இருந்து வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு கடந்த 3 ஆம் திகதி கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மாவட்டச் செயலர் புதிதாக நியமிக்கபட்டுள்ளதால் உரியவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்படவில்லை.

விரைவில் இயக்குநர் மற்றும் அரச அதிபர் ஊடாக வவுனியா வடக்குப் பிரதேச செயலாளருக்கு குறித்த கடிதம் அனுப்பப்பட்டு அவர்களுக்கான பணி இடைநிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று வவுனியா மாவட்ட சமுர்த்தி இயக்குநர் தெரிவித்தார்.

குறித்த ஐவரும் 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி திணைக்களத்துக்குள் உள்ளீர்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: