தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை!

Monday, June 20th, 2016

அரசாங்க, தனியார் பஸ் சேவைகள் மற்றும் ரயில் சேவைகள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் மற்றும் புகையிரத திணைக்கள தொழிற்சங்கங்கள் இவ்வாறு போராட்டம் நடத்த உள்ளன.

இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் தன்னார்வ அடிப்படையில் ஓய்வு பெற்றுக் கொள்வது குறித்த சுற்று நிருபத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து பாரிய போராட்டம் நடத்தப்படும் என இ.போ.சவை பாதுகாப்போம் என்ற கூட்டு தொழிற்சங்கங்களின் பிரதான செயலாளர் சேபால லியனகே ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் …

இலங்கை போக்குவரத்துச் சபை மறுசீரமைப்பு, புறக்கோட்டை பஸ் தரிப்பிடத்தில் தனியார் பஸ்களுக்கு இடமளிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னதாக போக்குவரத்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஒன்றை வழங்காவிட்டால் இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏழு தொழிற்சங்கங்கள் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜூலை மாதம் 1ம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் 15 வீதத்தினாலும் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 10 ரூபாவாகவும் உயர்த்தப்படாவிட்டால் ஜூலை மாதம் 4ம் திகதி நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து தனியார் பஸ்களும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் என அகில இலங்கை தனியார் பஸ் நிறுவன கூட்டமைப்பின் செயலாளர் அன்ஜன பிரயன்ஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாகாண பஸ் உரிமையாளர் சங்கம் தென் மாகாண பஸ் உரிமையாளர் சங்கம் ஆகியன உள்ளிட்ட பல தனியார் பஸ் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புகையிரத திணைக்கள ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவசர தேவையாகக் கருதி இந்த சுற்று நிருபத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை புகையிரத ஊழியர்கள் சங்கம், பிரதமரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளனர். மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts:


யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு க.பொ. த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் கவ...
வீதிச் சமிக்ஞை விளக்கு சிவப்பு நிறத்தில் எரிந்த போது நிற்காமல் சென்ற இரு இளைஞர்களுக்கு அபராதம்!
கொரோனா தொடர்பில் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 2 ஆவத...