இலங்கையின் கட்டடக்கலை அடைந்த தரம் மற்றும் சிறப்பை மீட்டெடுக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Sunday, August 6th, 2023

கடந்த காலத்தில் இலங்கையின் கட்டடக்கலை அடைந்த தரம் மற்றும் சிறப்பை மீட்டெடுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில், நடைபெற்ற கட்டடக் கலைஞர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட சில கட்டடங்களை ஆயிரம் முதல் 2000 வருடங்கள் வரை பராமரிக்க முடியாதுள்ளது.

கட்டடக்கலைத் துறையில் நமக்குப் பெருமை சேர்க்கும் நினைவுச் சின்னங்கள் உள்ளன. ருவன்வெலி விகாரை, அபயகிரிய, ஜேதவனாராமய போன்ற வடிவமைப்புகள் இலங்கையை உலகிற்கு எடுத்துச் சென்ற நிர்மாணங்களாகும்.

சிகிரியா நாட்டின் அற்புதமான படைப்புகளுக்கு சிறந்த கட்டடக்கலை உதாரணமாகும். பொலன்னறுவையில் காணக்கூடிய அற்புதமான நிர்மாணங்கள் 2000 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளன.

இந்தநிலையில், தற்போது கட்டுமானத்துறை மறுசீரமைக்கப்பட வேண்டும். அரசின் கடன் மறுசீரமைப்பு திட்டம் முடிவுக்கு வந்த பிறகு நிர்மானத் துறையில் மீண்டும் பல வாய்ப்புகள் உருவாகும்.

கட்டுமானத் துறை முன்பு அடைந்த முன்னேற்றத்தை நம்மால் அடைய முடியாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும் திறன் எம்மிடம் உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்குள்வரத் தொடங்கியுள்ளதால், இந்த நடவடிக்கைகள் வெற்றியடைய வாய்ப்பு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: