தெற்கில் பேரிடரினால் அவதிக்குள்ளான மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருமாறு யாழ். வணிகர் கழகம் அவசர வேண்டுகோள்!

Tuesday, May 30th, 2017

தெற்கில் பேரிடரினால் அவதிக்குள்ளான மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருமாறு யாழ்.குடாநாட்டு வர்த்தகர்களிடம் யாழ். வணிகர் கழகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை(30) தங்கள் வர்த்தக ஸ்தாபனங்களுக்கு இதற்காக அனுப்பி வைக்கப்படும்  பாரவூர்திகளில் அரிசி, மா, சீனி, பால்மா, பிஸ்கட் வகைகள், தண்ணீர்ப்  போத்தல்கள், தீப்பெட்டிகள், உடுபுடவைகள் போன்ற அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வழங்கி உதவவும் எனவும் யாழ். வணிகர் கழகம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ். வணிகர் கழகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் தெற்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எமது சகோதர மக்கள் பெரும் துன்பங்களுக்கும், அழிவுகளுக்கும் முகம் கொடுத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தில் மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பாரிய பொறுப்பு எம்மனைவருக்குமுண்டு.

நேற்றுவரை எம்மோடு இந்த நாட்டில் வாழ்ந்து வந்த நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் இயற்கையின் சீற்றத்தின் காரணமாக உயிரிழந்து போயுள்ள நிலையில் இன்னும் பலர் காணாமல் போயுள்ள நிலையில், இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் உண்ண உணவுமின்றி வாடும் நிலைமையை நாம் அறிகின்றோம்.

பலத்த காற்றும் மழையும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந் நிலையில் உங்களின் உதவிக்கரம் மிக அவசரமாக தேவைப்படுகின்றது. இத்தருணத்தில் வர்த்தகப் பெருமக்களாகிய தங்களிடம் இருந்து பெறக்கூடிய உலர் உணவுப்பொருட்கள், உடுபுடவைகளை உடனடியாகச் சேகரித்து யாழ்ப்பாண அரசாங்க அதிபரூடாக தெற்கில் அவதியுறும் மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க ஆவண செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உலர் உணவுப்பொருட்கள், உடுபுடவைகள் வழங்க முடியாதவர்கள் இதற்கான நிதியுதவியினைவழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். எனவே, வர்த்தகப் பெருமக்கள் உலர் உணவுப்பொருட்களை, உடுபுடவைகளைத்  தங்களால் இயன்றளவு வழங்கி உதவுமாறு யாழ். வணிகர் கழகம் மேலும் கேட்டுள்ளது.

Related posts: