திருத்தங்களுடன் 20: மாகாண சபைகளின் ஒப்புதலுக்காக அடுத்த வாரம் விசேட அமர்வு!

Sunday, September 10th, 2017

திருத்தியமைக்கப்பட்ட அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மாகாண சபைகளின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய அரசு மீண்டும் அனுப்பி வைத்துள்ளது.

இது தொடர்பில் விவாதித்து – தீர்மானமொன்றை எடுப்பதற்காக அடுத்த வாரம் சகல மாகாண சபைகளும் விசேட அமர்வை நடத்தவுள்ளன.

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கும், தேர்தல் திகதியை தீர்மானிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்குவதற்கும் வழிவகுக்கும் வகையில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை தேசிய அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்து, அதை மாகாண சபைகளின் அனுமதிக்காக அனுப்பி வைத்தது.

எனினும், மத்திய அரசின் இந்த சட்டமூலத்துக்கு வடமேல் மாகாண சபையைத் தவிர ஏனைய 8 மாகாண சபைகளும் போர்க்கொடி தூக்கின. அத்துடன், எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புகளும், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் 20ஐ கடுமையாக எதிர்த்ததுடன், மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைப்பதற்குரிய அரசின் வியூகமே இது எனவும் சுட்டிக்காட்டின.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவும் ’20’ இற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.இவ்வாறு அரசுக்குள்ளும் – வெளியிலும் எதிர்ப்புகள் வலுத்ததால் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முடிவு செய்த தேசிய அரசு, இது சம்பந்தமாக சட்டமா அதிபருடனும் ஆலோசனை நடத்தியிருந்தது.

இதன்படி 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறிய பின்னர் ஒருவருட காலத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும், தேர்தல் திகதியை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும், மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன்னர் அதைக் கலைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் எஞ்சிய காலத்துக்கு மட்டுமே இடைக்காலத் தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட திருத்தங்களை அரசு உள்வாங்கியது.இப்படியான திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட புதிய சட்டமூலமே மாகாண சபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாகாண சபைகளும் அடுத்த வாரம் முடிவதற்குள் ’20’ பற்றி தமது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளன என்று அறியமுடிகின்றது.

Related posts: