திடீர் உயர் அழுத்த மின் காரணமாக பழுதடைந்த பொருள்களுக்கு இழப்பீடு  வழங்கக்கோரி மக்கள் மின்சார சபைக்குக் கடிதம்!

Thursday, January 17th, 2019

திருகோணமலை உதயபுரி கிராமத்தில் பொதுமக்கள் வீடுகளில் உள்ள மின்சார உபகரணங்கள் திடீரென்று பழுதடைந்துள்ளன. மின்சாரக் கோளாறு காரணமாகவே அவை பழுதடைந்துள்ளன என்று தெரிவித்துள்ள மக்கள் அவற்றுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என்று மின்சார சபையிடம் கடிதம் மூலமாக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 13 ஆம் திகதி காலை தொடக்கம் பிற்பகல் வரை தாம் பாவித்த மின்சார உபகரணங்களான தொலைக்காட்சி, அலைபேசி, மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி, சமையலறைச் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மின் கோளாறு காரணமாகப் பழுதடைந்துள்ளன. இவ்வாறு 30 க்கும் அதிகமான வீடுகளில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று சிறுசிறுகச் சேர்த்த தமது வீட்டு மின்சார உபகரணங்கள் பழுதடைந்தமைக்கு மின்சார சபையில் வழங்கப்பட்ட உயர் மின் அழுத்தமே காரணமாக இருக்கலாம் என்று நாம் நம்புகின்றோம். எனவே இதனை ஆராய்ந்து தமக்கு இழப்பீடு வழங்குமாறு பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களும் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.

Related posts: