தாஜுடீன் படுகொலை! போலி பிரேத பரிசோதனை அறிக்கைக்கு கடும் நடவடிக்கை!

Friday, May 27th, 2016

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீன் படுகொலை விவகாரத்தை மூடிமறைக்க  உதவும் வகையில் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வசீம் தாஜுடீன் படுகொலைச் சம்பவம் வாகன விபத்தாக சித்தரிக்கப்பட்டு மூடி மறைக்கப்படுவதற்கு குறித்த பிரேத பரிசோதனை அறிக்கைகளே காரணமாக அமைந்திருந்தது.

மூன்று சட்டமருத்துவ அதிகாரிகள் இவ்வாறான தவறான பிரேத பரிசோதனை அறிக்கைகளை வழங்கியிருந்தனர்.

தற்போது வசீம் தாஜுடீன் விவகாரம் படுகொலை என்று தெரியவந்துள்ள நிலையில், குறித்த மூன்று சட்டமருத்துவ அதிகாரிகளுக்கு எதிராக மருத்துவக் கவுன்சில் கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது.

போலியான மருத்துவ அறிக்கை மூலம் மருத்துவத்துறைக்கு களங்கம் விளைவித்தமை மற்றும் அவ்வாறான அறிக்கையொன்றை வழங்கி நீதித்துறை தவறாக வழிநடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலும் அவர்களின் மருத்துவர் அந்தஸ்து இடைநிறுத்தப்பட்டு, சட்ட மருத்துவர் பதவிகளிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையே உண்மைத் தகவல்களை மூடி மறைத்தல், குற்றமொன்றுக்கு உடந்தையாக இருந்தமை மற்றும் நீதித்துறையை தவறாக வழிநடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பேராசிரியர் ஆனந்த சமரசேகர உள்ளிட்ட மூன்று சட்டமருத்துவ அதிகாரிகளையும் கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Related posts: