சிறுவர்களுக்கு எதிராக 3785 முறைப்பாடுகள்!

Monday, July 17th, 2017

சிறுவருக்கு எதிரான குற்றங்கள் குறித்து இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில், 3785 முறைப்பாடுகள் வரை கிடைக்கப் பெற்றுள்ளதாக, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறுவருக்கு எதிரான குற்றங்கள் குறித்து முறையிடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1929 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, கூறப்பட்டுள்ளது.

24 மணித்தியாலங்களும் குறித்த இலக்கம் சேவையில் இருக்கும் எனவும், சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த எந்தவொரு முறைப்பாட்டையும் இதன்மூலம் முன்வைக்க முடியும் எனவும், அந்த அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.  இதற்கமைய, சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து 956 முறைப்பாடுகளும், கல்வி அறிவை வழங்காமை குறித்து 602 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன், பாலியல் வன்கொடுமைகள், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், திருட்டு வேலைகளுக்கு அவர்களைப் பயன்படுத்துதல் மற்றும் கடத்திச் செல்லல் போன்றன தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.  மேலும், இவற்றில் அதிக முறைப்பாடுகள் (569) கொழும்பில் இருந்தே கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், கம்பஹாவில் இருந்து 420 முறைப்பாடுகளும், குருநாகலில் இருந்து 283 முறைப்பாடுகளும், காலியில் இருந்து 259 முறைப்பாடுகளும் இரத்தினபுரியில் இருந்து 214 முறைப்பாடுகளும் இவ்வாறு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: