தரமற்ற பழங்கள் விற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை – யாழ். பாவனையாளர் அதிகாரசபை!

பழங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்பவர்கள் தரமான பழங்களை விற்பனை செய்ய வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என பாவனையாளர் அதிகாரசபையின் யாழ்.மாவட்டப் பொறுப்பதிகாரி த.வசந்தசேகரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
யாழ்.மாவட்டத்தில் பழவியாபாரம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. பெரும்பாலும் சகல கடைகளிலும் பழவியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தக் கடைகளில் பழங்களை வியாபாரம் செய்யும்போது 5 பழங்கள் கொடுக்கிறபோது அதில் 2பழங்களாவது பழுதடைந்து காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் தரிப்பிடத்தில் வைத்து விற்கப்படும் நடைபாதைப் பழவியாபாரக் கடைகளில் இவ்வாறு அழுகிய நிலையில் பழங்கள் விற்கப்படுவது தொடர்பில் பாவனையாளர் அதிகாரசபைக்கும் பல முறைப்பாடுகள் வந்துள்ளன. இந்த நடைபாதை வியாபாரிகள் இது தொடர்பில் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும். அதிகளவாக மக்கள் நடமாடகக்கூடிய இடமாக மத்திய பஸ் தரிப்பிடம் அமைந்துள்ளமையால், அநேக மக்கள் இந்த நடைபாதை வியாபாரிகளிடம் பழங்களைக் கொள்வனவு செய்வது அதிகமாகவே உள்ளது. இதனால் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையிலோ அல்லது தெரியாமலோ இவ்வாறு நல்ல பழங்களுடன் அழுகிய நிலையில் உள்ள பழங்களையும் கொடுத்து வருகின்றனர்.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தச்செயற்பாட்டை முற்றாக நிறுத்தவேண்டும். நடைபாதைக் கடைகளால் மாத்திரம் அல்லாது வேறு பிரபல்யமான உணவுக்கடைகள், குளிர்பான நிலையங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை முற்றாகத் தடுக்கவேண்டும். இல்லையேல் இது தொடர்பான கடைக்காரர்களுக்கு எதிராக மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக உடனடியாகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். – என்றார்.
Related posts:
|
|