தனி மனித மாற்றமும், ஒரு சிரிய குழந்தை சிரிப்பும்…!

Thursday, September 22nd, 2016

“படைகொண்டு அமைதியை ஏற்படுத்த முடியாது. நல்லுணர்வால் மட்டுமே அமைதியைப் பெற முடியும்” என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

போர் இல்லாத, பகைமை இல்லாத நிலையைக் குறிப்பதுதான் அமைதி. உலக அளவிலான நிரந்தர அமைதி காக்கும் பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

சாதி, மதம், இனம், மொழி எனச் சின்ன வயதில் இருந்தே படித்து வளரும் நாம், ஏனோ பள்ளி, கல்லூரிக் காலங்களைக் கடக்கும்போது அதை மறந்துவிடுகிறோம். விவரம் தெரியாத வயதில் நமக்குப் பிடித்தவர்களை யாரேனும் துன்பப்படுத்தினால் கோபப்பட்டு எதிர்ப்போம்.

ஆனால், வளர்ந்த பிறகு அது நண்பனுக்காக இருந்தது சமூகத்துக்காகவும், நாட்டுக்காகவும் மாறிவிடுகிறது. சிறுவயது முதல் இன்றுவரை நாம், என் நண்பன், என் சொந்தம், என் சமூகம், என் நாடு என மட்டுமே பார்க்கிறோம்.

அதில், நமக்குச் சொந்தமானவற்றுக்குப் பிரச்னை ஏற்பட்டால் சிறிதும் யோசிக்காமல், துன்பம் ஏற்படுத்துபவர்களை எதிர்ப்போம். நாம் பல இடங்களில் சுயநலவாதிகளாகவே வாழத் தொடங்கிவிட்டோம். உலக அளவில் பிரச்னை என்றால், நாட்டுக்காகப் போராடுவோம்.

நாட்டுக்குள் பிரச்னை என்றால் நம்முடைய மாநிலத்துகாகப் போராடுவோம். மாநிலத்தில் பிரச்னை என்றால் மாவட்டத்துக்காகவும், மாவட்ட பிரச்னை என்றால் ஊருக்காகவும் போராடுவோம். இதில் நமக்குச் சொந்தமான இடம், பொருள், மக்களுக்காக மட்டுமே யோசிக்கும் நாம் சுயநலவாதிகள்தானே?

தெருக்களில் சின்ன இடப்பிரச்னைக்காக ஆரம்பிக்கும் வன்முறைகள், உலக அளவில் நாடுகளைக் கைப்பற்ற நடக்கிறது. நடக்கும் போராட்டங்களில் முடிவை மட்டுமே மனதில்வைத்துப் போராடுகிறோம்.

ஆனால், அந்தப் போராட்டங்களில் நாம் இழக்கும் மக்களைப் பற்றியோ, அவர் குடும்பங்கள் பற்றியோ சிறிதும் யோசிப்பது இல்லை. நடக்கும் வன்முறைகள் அனைத்தும் போராடுபவர்களின் வலிமையைப் பரிசோதிப்பதாகவே இருக்கிறது.

போராட்டங்களின் முடிவில், யாரோ ஒருவர்தான் வெற்றியைச் சந்திப்பர். மற்றவரின் நிலை பற்றி நாம் கவலைகொள்வதே இல்லை. கடந்த ஒரு வருடத்தில் நமது அமைதியை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் தெரியுமா?

பல வருடங்களாக சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருக்கிறது. கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக்களை அழிக்க அதிபர் பஷீர், ராணுவத்தைப் பயன்படுத்தி வருகிறார். ராணுவத்தை எதிர்த்துக் கிளர்ச்சிக் குழுவினரும் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்தனர்.

இந்தப் போரில் லட்சக்கணக்கானவர்கள் கலவரத்தில் இறந்திருக்கிறார்கள். பல லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்துள்ளனர். ஒருவர் அதிபராக, நாட்டு மக்களுக்குள் பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள்.

இதன் விளைவு, குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை உயிரை இழந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலும் வன்முறைகள் முடிந்தபாடில்லை. இன்னும் எத்தனை அய்லான்களை நாம் இழக்க நேரிடுமோ தெரியாது?

இது உலகின் ஏதோ ஒரு பகுதியில் நடக்கும் விஷயமல்ல, தமிழ்நாட்டில் காவிரி நதிநீருக்காக நடத்தும் போராட்டம் பல வருடங்களாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இரு மாநிலங்களிலும் பிரச்னைகள், வன்முறைகள் தலைதூக்கி வருகின்றன.

கர்நாடகாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பேருந்துகளை எரித்து சாம்பல் ஆக்கினர். தமிழ் பேசும் மக்களையும் அடித்துத் துன்புறுத்தினர். இயற்கைக்குச் சொந்தமான நீரை மற்ற மாநிலத்துக்கு பகிர இத்தனை வன்முறை தேவையா?

இந்தியாவில் பல இடங்களில் சாதிக் கலவரங்கள், ஆணவக் கொலைகள், பாலியல் வன்முறைகள் என நம் அமைதியை தினம்தினம் இழந்து வருகிறோம். காஷ்மீரில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதலால் தமிழக ராணுவ வீரர் இறக்கிறார்.

அமைதி ஒரு நாட்டையே பாதிக்கிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கின்றன. ஓர் ஆய்வில், கடந்த ஆண்டில் மட்டும் 34 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன எனச் சொல்லப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் பெண்கள் 6 முதல் 60 வயது வரை இருக்கின்றனர். மத்தியப் பிரதேசத்தில்தான் அதிக பாலியல் வன்முறைகள் நடக்கின்றன எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் தொடர்ந்து பெண்களுக்கு எதிராகப் பல வன்முறைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ‘ஒருதலை காதல்’ என்ற பெயரில் ஆண்கள் செய்யும் கொலைகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இருவரும் சேர்ந்தே முடிவு செய்ய வேண்டிய ஒரு விஷயத்தில், ஒருவர் மட்டும் தனித்து முடிவெடுத்து நடத்தும் வன்முறை ஒரு நல்ல தீர்வாகுமா?

உலகிலோ, நாட்டிலோ, மாநிலத்திலோ நடக்கும் பிரச்னை, அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா? நமக்கு நடந்தால்தான் அது பிரச்னையா? தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாளில் பார்க்கும், படிக்கும் விஷயம், யாருக்கோ எங்கோ நடக்கிறது என அதைக் கடந்துசெல்கிறீர்களா?

எந்த ஒரு பிரச்னையும் நம்மைப் பாதிக்காதவரை அதைப் பற்றி நாம் பெரிதாகப் பொருட்படுத்துவதே இல்லை. நாளை யாருக்கோ நடக்கும் வன்முறை நமக்கோ, நம்மைச் சேர்ந்தவருக்கோ நடக்கலாம். அப்போது நம்முடைய இனவெறியோ, சமூகவெறியோ வெளியே வரக்கூடும்.

international-world-peace-day-text-on-sand

Related posts: