கல்லுண்டாயில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொர்புடைய வாள்கள் பொலிஸாரால் மீட்பு!

கல்லுண்டாயில் நபரொருவர் மீது வாளால் வெட்டி தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கும் குழுவினரிடமிருந்து பொலிஸாரால் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்லுண்டாய் பகுதியில் உடலில் பல வெட்டுக்காயங்களுடன் மயங்கிய நிலையில் அநாதரவாக இருந்த நபர் பொலிஸாரால் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதே நேரம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வாள்வெட்டு போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்விரு சம்பவங்களும் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணிக்கும் 8மணிக்குமிடையில் கல்லுண்டாய் வை.எம்.சி.வீதி மற்றும் ஆனைக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெட்டுக் காயங்களுக்குள்ளான நபருக்கு சுமார் 40 வயதிருக்கும் என தெரிவித்த பொலிஸார் இவர் எவ்விடத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் மற்றும் ஏனைய தகவல்கள் என்ன என்பது தொடர்பாகவும் இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த நபரை வேறு எங்காவது வெட்டி விட்டு இப்பகுதியில் போட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாகவும் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரை பொலிஸார் சோதனையிட முயன்றபோது அவர்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் துரத்திப்பிடித்து கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்களிடமிருந்து வாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இவர்களுக்கும் மேற்படி இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்புகள் ஏதாவது இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
|
|