ஓய்வுபெறும் அரச அதிகாரிகள் இனி வாகனங்களை கொண்டு செல்லமுடியாது – அரச நிறுவனங்களுக்கு திறைசேரி உத்தரவு!
Monday, November 7th, 2022அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஓய்வுபெறும்போது, அவர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்களை அவர்களிடமே ஒப்படைக்கும் முறைமையை நிறுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு திறைசேரி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன இது தொடர்பான சுற்றறிக்கையை, அமைச்சு செயலாளர்கள் மற்றும் அரச வங்கிகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
ஓய்வு பெறும்போது உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு மாற்றுவது தொடர்பில் அரச நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழு (கோப்) எழுந்த கேள்விகளையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை மாற்றுவதில் அரசுடைமை நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து உள் கொள்கைகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடி மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சில அரச நிறுவனங்கள் திறைசேரிக்கு தெரிவிக்காமல் வாகனங்களை மாற்றுவதற்கான ஆவணங்களை அனுப்பியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வாகனத்தின் மதிப்புக் குறைப்புக்குப் பிறகு வாகனங்களை மாற்றுவதற்கு சில நிறுவனங்களின் பணிப்பாளர் சபை தீர்மானங்களை எடுத்துள்ளன.
சிரேஷ்ட அரச அதிகாரிகள், செயலாளர்கள், தங்களது ஓய்வு பெறும் வயதில் அவர்களது வாகனங்களை எடுத்துச் செல்வதை நிறுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் நடைமுறையில் இருந்த போதிலும் சில அரச நிறுவனங்கள் தமக்கான சொந்த கொள்கைகளை வகுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|