எரிபொருள் நிலையங்களில் கலவரத்தை உருவாக்குபவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு காவல் நிலையங்களுக்கு உத்தரவு!
Sunday, June 26th, 2022எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலவரத்தை உருவாக்குபவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு அனைத்து காவல்நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடக்கும் கலவரம், மோதல்கள் போன்ற அனைத்து சம்பவங்களையும் வீடியோவில் பதிவு செய்யுமாறு நிரப்பு நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளுக்கே அவர் உத்தரவிட்டுள்ளார்.
வீடியோ காட்சிகளின் நகலை காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கொடுத்து காவல் புத்தகங்களில் பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தொடர்வதற்கு இந்தக் காணொளிகள் பயன்படுத்தப்பட வேண்டுமென காவல்துறை மா அதிபர் தனது உத்தரவில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை கடந்த வாரம் யாழில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்திருந்தார். அவ்வாறு குறித்த இளைஞர் மீதான தாக்குதலின்போது அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சிசிரிவி கமரா இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|