எம்.சீ.சீ உடன்படிக்கை விவகாரம் – கமத் தொழிலாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

Thursday, March 24th, 2022

அமெரிக்காவின் எம்.சீ.சீ. உடன்படிக்கையில் அரசாங்கம் கையெழுத்திடாவிட்டாலும் அந்த உடன்படிக்கை ஊடாக நடைமுறைப்படுத்தப்படவிருந்த காணிகளை நிதிமயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு தேவையான சட்ட திருத்தங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் தொடர்பான சில சட்ட திட்டங்கள் சம்பந்தமான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் –

கமத்தொழிலாளர்கள் தமது காணிகளை அடகு வைக்க முடியும். அதற்கான உரிமை ஏற்கனவே இந்த சட்டத்தில் உள்ளது. எனினும் அரச வங்கியில் மாத்திரமே கமத்தொழிலாளர்கள் தமது காணிகளை அடகு வைக்க முடியும்.

அதுவும் பிரதேச செயலாளரின் அனுமதி மற்றும் கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் காரணமாக எந்த வங்கியிலும் காணிகளை அடகு வைக்க முடியும்.

நுண் கடன் நிறுவனங்களில் இந்த காணிகளை அடகு வைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், அது மிகவும் ஆபத்தாக அமையும். காணிகளை நிதிமயப்படுத்தலை நோக்கி கொண்டு செல்லும் திருத்தங்களே செய்யப்படுகின்றன.

மிகப் பெரிய வர்த்தகர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கே இந்த காணிகள் மூலதனமாக மாறும். எம்.சீ.சீ. உடன்படிக்கை செய்து கொள்ளப்படாவிட்டாலும் அதற்கு தேவையான விடயங்கள் இந்த திருத்தங்கள் ஊடாக நடைபெறும் எனவும் ஹரின் அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: