இளம் வர்த்தகர் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 7 விசேட பொலிஸ் குழுக்கள் !

Friday, August 26th, 2016

சில தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகரின் கொலை தொடர்பில் 50 இற்கும் மேற்பட்டோரின் வாக்குமூலங்கள் இதுவரை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை 7 பொலிஸ் குழுக்கள் இக்கொலை தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட வர்த்தகர் காணாமற்போன தினமன்று இரவு உணவு உட்கொண்ட இடங்களிலுள்ள தொழிலாளர்களிடமும் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் தலை தாக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிக இரத்தக் கசிவு காரணமாக பம்பலப்பிட்டி வர்த்தகரின் மரணம் நேர்ந்துள்ளதாக பிரேதப் பரிசோதணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை , நேற்றைய தினம் பிரேதப் பரிசோதனைகளை கேகாலை வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரி ரமேஷ் அழகியவன்ன மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து பிரேதம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை இந்தக் கொலையுடன் தொடர்புப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் ஐவரின் வெளிநாட்டுப் பயணங்களை தடை செய்யும் உத்தரவு பொலிஸாரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, கொழும்பு புதுக்கடை நீதிமன்றிலல் இந்த உத்தரவைக் கோரியிருந்தது.

கடந்த 21 ஆம் திகதி காணாமற்போன குறித்த வர்த்தகரான மொஹமட் ஷகீப் சுலைமான் தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்ட குறித்த ஐவரிடமும், இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்புப்பபிரிவினர் தெரிவித்தனர்.

அத்துடன் கொலை தொடர்பில் தகவல் திரட்டும் நோக்கில் கொழும்பு நகரிலுள்ள சீ.சீ.டிவி கமராக்களை பொலிஸார் பரிசீலணை செய்து வருவதுடன் பம்பலப்பிட்டி பொலிஸார் உள்ளிட்ட மேலும் 7 குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொலை செய்யப்பட்ட வர்த்தகர் வெளிநாட்டிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர். 29 வயதுடைய குறித்த வர்த்தகர் பம்பலப்பிட்டி கொத்தலாவல ஒழுங்கையில் வசித்து வந்துள்ளதுடன் இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: