ஆலயங்களில் மிருக பலியிடுதலுக்கு யாழ். மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்ய முடியாது : மல்லாகம் மாவட்ட நீதவான் உத்தரவு
Wednesday, May 25th, 2016ஆலயங்களில் மிருக பலியிடுதலுக்கு யாழ். மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்ய முடியாது எனத் தெரிவித்த மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், அதனையும் மீறிப் பலியிடுதலில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(24-05-2016) தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டிலுள்ள ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலியைத் தடுத்து நிறுத்துமாறு கோரி இலங்கை சைவ மகாசபை யாழ். மேல் நீதிமன்றத்தில் இவ்வருட ஆரம்பத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஆலயங்களில் மிருகபலி இடம்பெறுவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், கடந்த ஏப்ரல் -1 ஆம் திகதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நகர்த்தல் பத்திரமொன்றின் மூலம் வேள்வியை நடத்த அனுமதிக்குமாறு கோரி கருகம்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலய நிர்வாகத்தினர், மிருகபலிக்கு அனுமதி வழங்குமாறு பிரதேச சபையைப் பனிக்க வேண்டும் எனவும் மல்லாகம் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, யாழ். மேல்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்ய முடியாது எனவும், மிருகபலியை மேற்கொள்ள முடியாது எனவும் நீதவான் தெரிவித்தார்.
மேலும் ஆலயங்களில் மிருகங்களைப் பலியிடுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் கவுணாவத்தை ஆலயத்தில் மிருக பலி இடம்பெற்றால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யுமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
Related posts:
|
|