ஆங்கில மொழி உலகளாவிய ரீதியில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது : சிரேஷ்ட விரிவுரையாளர் ஸ்ரீகணேசன்
Wednesday, June 22nd, 2016நாங்கள் மேற்படிப்பின் போது சில விடயங்களை ஆழமாகக் கற்க வேண்டிய தேவை வருகின்ற போது தான் ஆங்கிலக் கல்வியின் அவசியம் எம்மில் பலராலும் உணரப்படுகின்றது. தற்போது பல்கலைக் கழகத்தில் பல்வேறு கற்கை நெறிகள் ஆங்கிலத்தில் தான் நடாத்தப்படுகின்றன. உலகளாவிய ரீதியிலும் பல கற்கை நெறிகள் ஆங்கிலத்தில் தான் காணப்படுகின்றன. இதன் காரணமாக ஏனைய மொழிகளை விட ஆங்கில மொழி உலகளாவிய ரீதியில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார் யாழ். பல்கலைக் கழக ஆங்கிலத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி- கந்தையா ஸ்ரீகணேசன்.
சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலயத்தின் ஸ்தாபகர் தினமும் பரிசளிப்பு விழாவும் அண்மையில் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் வித்தியாலய அதிபர் ம. மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சுயமொழிக் கல்வி முறை வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் தமிழ் மொழியைக் கற்கின்ற போது சர்வதேச மொழியாகிய ஆங்கில மொழியைக் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆங்கில மொழியை நாங்கள் விளங்கிக் கற்றுக் கொள்ள முடியாவிட்டால் உலகளாவிய ரீதியில் நாங்கள் பல்வேறு கற்கை நெறிகளைக் கற்றுக் கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.
1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆங்கில மொழிக் கல்வி இலங்கையில் வீழ்ச்சி கண்டது. நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக ஆங்கிலம் படித்த எங்களுடைய தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறினார்கள். பலர் இறந்து போனார்கள். இதனால், ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இதனை நிவர்த்தி செய்வது சவாலான ஒரு விடயம் என தெரிவித்தார்.
Related posts:
|
|