அக்கராயனில் குடிநீர் விநியோகம் தடை – பொதுமக்கள் குற்றம் சாட்டு!

Thursday, October 17th, 2019


கிளிநொச்சி அக்கராயனில் கடந்த இருபது நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இடம்பெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீர் வளங்கல் வடிகாலமைப்புச் சபையினால் அக்கராயனில் குடிநீர்த்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அக்கராயன் மகா வித்தியாலயத்திற்;கு முன்பாக நீர்த்தாங்கி உள்ளது. குடிநீருக்கு உரிய கிணறு அக்கராயன் இடதுகரை வாய்க்காலுக்கு அருகில் உள்ளது.

குறித்த கிணற்றின் ஊற்றுக்கள் அடைக்கப்பட்டு கிணற்றின் நீர்மட்டம் அடி நிலையைச் சென்றடைந்ததன் காரணமாக கிணற்றின் ஒரு பக்கத்தினால் குழி தோண்டப்பட்டு நீர் ஊற்றுக்களை அதிகரிப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில் மழை பெய்ததன் காரணமாக வெளி வெள்ளம் கிணற்றுக்குள் சென்று தற்போது குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை.

குறித்த வேலைகள் தொடங்கும் போது குடிநீர் வழங்கலுக்குரிய மாற்று ஒழுங்குகளும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் குறித்த கிணற்றின் வேலையை விரைவாக நிறைவு செய்து குடிநீர் விநியோகத்தினை ஆரம்பிக்குமாறு குடிநீர் நெருக்கடியை எதிர் கொண்டுள்ள குடும்பங்கள் கிராம உத்தியோகத்தரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறித்த வேலையை விரைவாக முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்களினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது குடிநீரைப் பெற்று வந்த 250 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீருக்கு அலைந்து திரிகின்ற நிலைமை காணப்படுகின்றது.

Related posts: