13ஆவது திருத்தச் சட்டம் சிறந்த ஆரம்பமே – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 4th, 2018

தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைக்கு 13ஆவது திருத்தச் சட்டம் நிரந்தரத் தீர்வல்ல என்பது புதிய கண்டுபிடிப்பல்ல. 13ஆவது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிச் செல்வதற்கு சிறந்த ஆரம்பமாகவே அமையும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்  நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த மூன்று தசாப்த காலமாக நான் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களிடமும், சர்வதேச சமூகத்தினரிடமும் இதையே வலியுறுத்தி வருகின்றேன்.

போதிய அரசியல் பலம் எமக்கு கிடைத்திருந்தால் நாம் அதை நடைமுறைப்படுத்திக் காட்டியிருப்போம். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து கட்டம் கட்டமாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு நோக்கி முன்னேறுவதே நடைமுறைச் சாத்தியமானதாகும்.

அதேகாலப் பகுதியில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்கள் கேட்கும் உரிமையின் நியாயத்தை நடைமுறையில் உணர்த்தி அவர்களின் நம்பிக்கையையும் வென்றெடுக்க வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டமும், அதைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையும் இலங்கை அரசின் விருப்பத்தினாலோ,

மேடைக்கு மேடை உசுப்பேற்றும் அரசியல் பேசி, தமிழ் இளைஞர், யுவதிகளை பலிக் களத்திற்கு அனுப்பத் துணிந்த தமிழ் அரசியல் தலைமைகளின் தனித்துவமான முயற்சியினாலோ கிடைக்கப்பெற்றதல்ல.

அது தமிழ் மக்கள் நடத்திய சாத்வீகப் போராட்டத்தினாலும், தமிழ் இளைஞர், யுவதிகள் தமது உயிர்களை பணயம் வைத்து நடத்திய ஆயுதப் போராட்டத்தினாலும் கிடைத்ததாகும்.

13ஆவது திருத்தச் சட்டத்தையும், மாகாணசபை முறைமையையும் ஆரம்பத்தில் சிங்கள மக்கள் எதிர்த்திருந்தாலும், இந்த சட்ட ஏற்பாட்டின் நன்மைகளை அனுபவித்தவர்கள் சிங்கள மக்கள்தான்.

துரதிஷ;டவசமாக தமிழ் மக்களுக்கு அந்த வாய்ப்பை தமிழ்த் தலைமைகள் பெற்றுக்கொடுக்கவில்லை.

ஆகையால் இன்று மாகாணசபை முறைமையை பாதுகாத்து வலுப்படுத்த வேண்டும் என்று முன்னின்று குரல் கொடுக்கும் நிலையில் சிங்கள மக்கள் இருக்கின்றார்கள்.

ஆகவே 13ஆவது திருத்தச் சட்;டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கள மக்கள் தடையாக இருக்கமாட்டார்கள்.

தவிரவும் ஏற்கனவே சட்டதிருத்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால் மீண்டும் நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறவேண்டும் என்ற தேவை இல்லை. இந்தியவின் பக்கபலமும் இருக்கும்.

மாகாணசபை அதிகாரத்தை ஆற்றலோடு நிர்வகித்து தமிழ் மக்களுக்கு உச்சபட்சமாக நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கும் விருப்பமும்,

அக்கறையும் இல்லாதவர்களே மாகாணசபை முறைமையை முடக்கி வைத்துக்கொண்டு அடைய முடியாத இலக்குகளை நோக்கி தமிழ் மக்களை வழி நடத்த முயற்சிக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

வெளிநாட்டு இராஜதந்திர பணிகளில் தமிழ் மக்களது பங்களிப்பும் உள்வாங்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வ...
மக்கள் நலன்சார்ந்து சிந்திக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக இருப்பது சிறப்பானது ...
சட்டவிரோத தொழில் முறைக்கு எதிராக கடற்றொழிலாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ...