வடக்கு வீதியில் அதிக கெடுபிடி : அங்கலாய்க்கின்றனர் மக்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
Friday, May 24th, 2019சோதனைகள் என்ற பெயரில் நாட்டில் அனர்த்தங்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளைவிட வடக்கு நோக்கியதான பகுதிகளிலேயே ஏற்பாடுகள் அதிகமாகி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சோதனை நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய நிலையில் தேவை என்கின்ற போதிலும், அது அளவுக்கு அதிகமாகி, மக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தவதாக அமைந்து விடக் கூடாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களில் தங்களது சுயலாப பாசாங்கு அரசியலுக்காக வடக்கின் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் ஆடிக் கொண்டு வந்திருந்த கூத்தாட்டங்கள் காரணமாக அதிருப்தி கொண்ட நிலையில், பாதுகாப்புத் தரப்பினர் அந்த அதிருப்தியினை தங்கள் மீது காட்டுவதாகவே எமது மக்கள் அங்கலாய்த்து வருவதையும் நான் இந்தச் சந்தர்ப்பத்திலே குறிப்பிட வேண்டியுள்ளது. எனவே, இது குறித்து அரசு அவதானத்தில் எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை காட்டக் கூடிய சந்தர்ப்பமாக இன்றைய சூழ்நிலையை எவரும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். அதேநேரம், அப்பாவி மக்கள் எவராயினும் அம் மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகப் பாதிக்கப்படக் கூடாது என்பதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
குறிப்பாக, முஸ்லிம் மக்களில் பலரும், பல்வேறு பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டு வருவதாகவே அன்றாட ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இத்தகைய கைதுகளின்போது, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டிருந்தால், – அவர்களிடம் மேற்கொள்கின்ற விசாரணைகளின் பின்னர் அவர்கள் அப்பாவிகள் எனத் தெரியவரும் நிலையில் அவர்களை விடுதலை செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அதேநேரம், அத்தகைய அப்பாவிகளை கைது செய்வதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்ள வழிவகைளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், கடந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் சிங்கள மக்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றே தெரிய வருகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அப்பாவிகளும் அடங்குகின்றனர் என பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பிலும் அவதானமெடுத்து, உண்மையிலேயே வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்பில்லாதவர்களை விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
Related posts:
|
|