ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களுடனான சந்திப்பு எமக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 20th, 2019

தமிழ் மக்களின் கோரிக்கைகளோடு ஜனாதிபதி வேட்பாளார் கோட்டாபய ராஜபக்ச அவர்களை சந்தித்து பேசிய விடயங்கள் குறித்து தமக்கு நம்பிக்கை அளித்திருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

எந்தவொரு ஆட்சி இங்கு வந்தாலும் அவர்களுடன் பேரம் பேசி தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைப்பதே எமது ஆழ்மன இலட்சிய அரசியல் விருப்பமாகும்…

அந்த வகையில் எவரும் விரும்பியோ விரும்பாமலோ ஆட்சி அதிகாரத்தில் உட்காரப்போகின்ற கோட்டாபய ராஜபக்ச  அவர்களைச் சந்தித்து எது வித அரசியல் பலமும் இன்றி, அந்த அரசியல் பலத்தை எமது மக்கள் இனிவரும் காலத்தில் எமக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையோடு. எமது நல்லிணக்க உறவுகளோடு மட்டும் அவர்களுடன் பரஸ்பரம் உரையாடியிருந்தோம்.

இலங்கைத்தீவின் சகல இன மக்களும் ஏற்றுகொண்ட 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து தொடங்கி, அதை மேலும் பலப்படுத்தி அரசியல் தீர்வு நோக்கி செல்வது. எமது தேசத்தை தூக்கி நிறுத்தும் அபிவிருத்தி பணிகளை நாம் விட்ட குறையில் இருந்து மறுபடி தொடங்குவது.

முதற்கட்டமாக வேலையற்ற தமிழ் இளைஞர் யுவதிகளில் ஒரு இலட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பது. யுத்தம் காரணமாக கல்வித் தகமையை இழந்து நிற்கும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தற்காலிக வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதோடு கால அவகாசத்தின் அடிப்படையில் அதற்கான கல்வித்தகமையை அவர்கள் பெற்றிடவும், வேலையை நிரந்தரமாக்கவும் ஏற்பாடு செய்வது.

காணாமல் போன உறவுகளைத் தேடும் மக்களின் கண்ணீருக்கு பரிகாரம் பெற்றுக் கொடுப்பது…

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சியில் வெற்றி காண்பது.

நாம் ஏற்கனவே விடுவித்து இதுவரை மீட்கப்படாத எமது மக்களின் காணி நிலங்களை விடுவிப்பது. வீடற்ற மக்களுக்கு வீடு, நிலமற்ற மக்களுக்கு நிலம்,. மீள்குடியேறிய மக்களுக்கு நிரந்தர வாழ்வியல் உரிமை. இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் நடைபெறும் இன, மத ரீதியிலான சகல திணிப்பு நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துவது…

முள்ளிவாய்க்கால் வரை யுத்தத்தில் கொல்லப்பட்ட சகல மனித உயிர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் பொதுச் சதுக்கத்தையும் அதற்கான ஒரு நினைவு நாளையும் உருவாக்குவது. இது போன்ற எமது மக்களின் அபிலாசைகள் குறித்து எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப்போகின்ற கோட்டாபய ராஜபக்ச  அவர்களுடன் நாம் மனம் திறந்து பேசியதில் எமக்கு நம்பிக்கை தரும் சமிஞ்ஞைகள் கிடைத்திருக்கின்றன, என்னை நம்புங்கள்! நான் செய்வேன். செய்விப்பேன் என கூறும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,…

மாற்றமொன்று இந்த நாட்டில் விரைவில் நிகழும் என்பதில் மாற்றமில்லை. தமிழ் பேசும் மக்களாகிய நாம் இந்த மாற்றத்தில் பங்கு தாரர்களாக இருக்கப்போகின்றோமா?.. பார்வையாளர்களாக இருக்கப்போகின்றோமா?.. அல்லது வெறும் எதிர்ப்பாளர்களாக இருக்கப்போகின்றோமா?….

இதை தமிழ் பேசும் மக்களாகிய நாமே தீர்மானிக்க வேண்டும். நிகழப்போகின்ற அந்த மாற்றத்தில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பும் கணிசமான அளவு இருந்தாக வேண்டும்.

அதன் ஊடாகவே அந்த மாற்றத்தின் விமோசனங்களை தமிழ் பேசும் மக்களும் அனுபவிக்க முடியும்.மாற்றத்தை உருவாக்குவோம் என்று தமிழ் மக்களிடம் கூறி இன்றைய அரசை உருவாக்க பங்களித்த சக தமிழ்க் கட்சிகளே இன்று அதே அரசு தம்மை ஏமாற்றி விட்டதாக புலம்பத்தொடங்கி விட்டார்கள்.

அவர்களைப்போல் நானும் எதிர்காலத்தில் எமது அரசு எம்மை ஏமாற்றி விட்டதாக ஒரு போதும் கூறப்போவதில்லை. யாருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று நான் கோருகின்றேனோ.. அவர்களுக்கு வாக்களித்தால் அதற்கான பொறுப்பை நானே ஏற்பேன்.

எமது மக்களிடம் இன்று இருப்பது வாக்குப்பலம் ஒன்றே. அதை வைத்து எமது மக்களின் சகல உரிமைகளையும் வென்றெடுத்தே தீருவோம் என்ற எமது உறுதியான ஆத்ம பலம் எம்மிடம் உண்டு. எமது அகராதியில் எமது சொந்த சலுகைகளை பெறுவதற்காக எக்காலத்திலும் எந்த அரசுடனும் நாம் உறவு வைத்திருந்தவர்கள் அல்ல. அதற்காக எமது மக்களை எவருக்கும் வாக்களிக்குமாறு நாம் கேட்டதும் இல்லை. இனியும் அது நடக்காது..

நிகழப்போகின்ற ஆட்சி மாற்றத்தை வைத்து எமது மக்களின் வாக்குப்பலத்தால் அனைத்து உரிமைகளையும் நான் பெற்று தருவேன். யதார்த்தமான, உறுதியான எமது அரசியல் வழிமுறைக்கு யதார்த்தமானதும், உறுதியானதுமான நாட்டில் தலைவர் ஒருவர்

உருவாகும் போது, அவரது வருகையை நாம் சரிவர கையாள வேண்டும். அழிவு யுத்தத்தின் போது தமிழ் மக்கள் சந்தித்திருந்த அவலங்களுக்கு ஒரு தரப்பை மட்டுமே தமது குறுகிய சுயலாப அரசியல் நோக்கில் பாரபட்சமுடன் சிலர் குற்றம் சுமத்துகிறார்கள்.

ஆனாலும், தென்னிலங்கை அரசியல் வாதிகள் பலரும் யுத்தத்தை நடத்தி அதில் வெற்றி கண்டவர்கள் தாமே என்று ஒவ்வொரு காரணம் சொல்லி யுத்த வெற்றிக்கு உரிமை கோருகின்றார்கள். இன்று இதில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது?.. இதுவே தமிழ் மக்களின் கேள்வி!

இல்லாத ஊருக்கும்.. இலக்கற்ற  பயணத்திற்கும் நாம் ஒரு போதும் வழி காட்டப்போவதில்லை. எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற வாறு இதுவரை எமது மக்களுக்கு எம்மால் முடிந்ததை பெற்றுத்தந்த நாம். எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தோடு மக்களின்  தலைவிதியையே மாற்றியப்போம்.

எதையும் சாதிக்க முடிந்த வல்லமை படைத்த உறுதியானதொரு நாட்டின் தலைவர் மூலமே தமிழ் மக்களின் வரலாற்றிலும் நாம் மாற்றங்களை உருவாக்க முடியும்.

இந்த உறுதியான நிலைப்பாட்டில் இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச  அவர்களை ஆதரிப்பதென நாம் தீர்மானம் எடுத்துள்ளோம்.

சொன்னதைச் செய்வோம்!

செய்வதைச் சொல்வோம்!

நாம் செல்லும்

பயணம் வெல்லும்!

மத்தியில் கூட்டாட்சி!

மாநிலத்தில் சுயாட்சி!!

முயல்வோம்!

வெல்வோம்!

உளம் சோரோம்!

Related posts:


சுழிபுரம் மேற்கு அலைமகள் முன்பள்ளி கட்டடத்தை பாடசாலை சமூகத்திடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
தமிழ் மக்கள் மத்தியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தோற்றுவித்தவர்கள் நாம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! 
தீர்க்கதரிசனம் இல்லாத தலைமைகளினால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்- அமைச்சர் டக்ளஸ் தேவானந...