வைத்தியர்கள் இடமாற்றம் தொடர்பில் வடக்கு கிழக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனியான பட்டியல் முறையை உடன் நீக்கப்பட வேண்டும்!

Wednesday, August 7th, 2019
Warning: mysqli_query(): (HY000/2013): Lost connection to MySQL server during query in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/wp-db.php on line 2030

நாட்டில் யுத்தம் நிலவிய காலகட்டங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென தனியான – விசேட வைத்தியர்களுக்கான இடமாற்றப் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு அதன் பிரகாரம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நியமனம் பெறுகின்ற வைத்தியர்களுக்கு ஒரு வருட காலத்தில் இடமாற்றங்களைப் பெறலாம் என்ற சலுகை வழங்கப்பட்டிருந்தது. ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என்ற நம்பிக்கையில் பல வைத்தியர்கள் அங்கு வந்து கடமைகளில் ஈடுபட்டதன் காரணமாக இந்த ஏற்பாடு யுத்தம் நிலவிய காலகட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, தற்போது 10 ஆண்டுகள் கடந்துவிட்டுள்ள நிலையிலும், மேற்படி வைத்தியர்களின் இடமாற்றத்திற்கான தனியான – விசேட பட்டியல் இன்னமும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் அப்பகுதிகளின் சுகாதார செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக, சில விசேட திறன்களை இந்த வைத்தியர்களுக்கு பயிற்றுவித்த பின்னர் சிறிது காலத்தில் இவர்கள் இடமாற்றம் பெறுவதால், சுகாதார சேவைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

பொதுவாக ஒரு வைத்தியர் ஒரு வைத்தியசாலையில் நியமிக்கப்பட்டால், அவர் கட்டாயமாக 4 ஆண்டுகள் அங்கு சேவையாற்றிய பின்னரே இடமாற்றம் பெற முடியும் எனக் கூறப்படுகின்ற நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் இந்த தனியான பட்டியல் இன்னமும் தொடர்வதானது எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் கருதப்படுகின்றது.

அதேநேரம் தற்போது அரச மருத்துவமனைகளில் மருந்துகளுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.

எனவே வைத்தியர்கள் இடமாற்றம் தொடர்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற தனியான பட்டியலை உடன் நீக்கி நாட்டில் ஏனைய 7 மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பொதுவான பட்டியலை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

தற்போது நாட்டில் அரச மருத்துவமனைகளில் மருந்து வகைகளுக்குத்  தட்டுப்பாடுகள் நிலவாத வகையில், அவற்றை வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாது?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

(நாடாளுமன்றில் நடைபெற்ற 27ஃ2 கேள்வி நேரத்தின்போது சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்களிடம்..)